II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்365



[கலி நிலைத்துறை]
என்ன வேத்தியின் னருள்முகந் தீறிலா வன்பாற்
பின்னர் வேறுபல் பூசையும் பிறக்குவித் திருந்தான்
மன்ன ரேறடை யார்க்கொரு மடங்கலே றடல்வேற்
றென்ன ரேறெனத் தோன்றிய வரகுண தேவன்.

     (இ - ள்.) என்ன ஏத்தி - என்று துதித்து, மன்னர் ஏறு - அரசர்களுள்
ஆண் சிங்கம் போன்றவன், அடையார்க்கு ஒரு மடக்ஙல் ஏறு -
பகைவர்களுக்கு ஓர் இடியேறு போன்றவன், அடல்வேல் தென்னர் ஏறு -
வெற்றி பொருந்திய வேற்படையேந்திய பாண்டியர்களுள் ஏறு போன்றவன்,
என தோன்றிய வரகுணதேவன் - என்னும்படி பிறந்த வரகுண தேவனென்னும் பாண்டியன், இன் அருள் முகந்து - இனிய திருவருளை முகந்துண்டு, ஈறு
இலா அன்பால் - அழிவில்லாத அன்பினால், பின்னர் வேறு பல் பூசையும்
பிறக்குவித்து இருந்தான் - பின் பல வேறு வகைப்பட்ட பூசனைகளையும்
விளங்கச் செய்வித்து இருந்தனன்.

     பிறங்குவித்து என்பது வலித்தலாயிற்று. மடங்கல் - இடி. தென்னர்
ஏறு - பாண்டியருட் சிறந்தவன். (63)

என்ற தென்மலை முனிவனை யிருடிக ணோக்கி
அன்று வாசவன் பழிகரி சாபமந் தணனைக்
கொன்று தாயொடுங் கூடிய கொடுவினை முதலாத்
துன்று பாவமு மதுரையிற் றொலைத்தன னன்றோ.

     (இ - ள்.) என்ற - என்று கூறியருளிய, தென்மலை முனிவனை
- பொதியின் மலையையுடைய அகத்திய முனிவனை, இருடிகள் நோக்கி
- முனிவர்கள் பார்த்து, அன்று - முன்பு, வாசவன் பழி - இந்திரன்
பழியையும், கரிசாபம் - வெள்ளை யானை சாபத்தையும், அந்தணனைக்
கொன்று தாயொடுங் கூடிய கொடுவினை முதலாத்துன்று பாவமும் -
தந்தையாகிய அந்தணனைக் கொன்று தாயுடன் கலவி செய்த மாபாதக
முதலாக மிக்க பாவங்களையும், மதுரையில் தொலைத்தனன் அன்றோ -
மதுரையிலேயே போக்கியருளினான் அல்லவா.

     வேறிடங்களிற் செய்த பாவ முதலாயினவும் முன்பு இம்மதுரையிலே
போக்கப்பட்டன என்றவாறு. தேவர், மனிதர், விலங்கு என்னும் எவ்வியிரின்
பாவத்தையும் இந்நகரிற் போக்கினன் என்பதற்கு வாசவன், கரி, மாபாதகன்
வரலாறுகள் சுட்டப் பெற்றன. இத் திருவிளையாடற் சரிதம் அகத்தியரால்
முனிவர்கட்குக் கூறப்பட்டதென்பதனைப் புராண வரலாற்றுட் காண்க. (64)

பரம னெண்குணன் பசுபதி வரகுணற் பற்றும்
பிரம வன்பழி யிடைமரு திடைவிட்டுப் பெயர
வரம ளித்தவா றென்னைகொல் வள்ளலே யிதனைத்
திரமு றப்புக லெமக்கென முனிவர்கோன் செப்பும்.