II


கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்37



     (இ - ள்.) மன்னன் - (அங்ஙனம் அஞ்சிய) அரசனானவன், இந்த
ஆடல் - இத் திருவிளையாடல், எமக்கு உயிராய இவ்வந்தம் இல்லி அருள்
விளையாட்டு எனா - எமக்கு உயிராகிய இந்த அழிவில்லாத சோமசுந்தரக்
கடவுளின் அருள் விளையாடலே என்று, முந்தைவேத முதல்வனை -
முன்னவனாகிய வேதநாயகனை, மீளவும் வந்து வந்தனை செய்தனன் -
மீண்டும் வந்து வணங்கினன்.

     அந்தம் இல்லி - ஈறில்லாதவன்; இ : வினைமுதற்பொருள் விகதி.
முந்தை வேதத்திற்கு அடையுமாம். முன்பு சோமசுந்தரக் கடவுளை வணங்கித்
திருக்கோயிலை வலம்வருகையிற் சிவசித்திரைக் கண்டானாகலின் ‘மீளவும்
வந்துவந்தனை செய்தனன்’ என்றார். (24)

முழுது ணர்ந்த முதல்வநின் னாடலை
இழுதை யேனறி யாதளந் தேனெனா
அழுதி றைஞ்சி யபராத மீந்துகை
தொழுது நின்று துதிக்கத் தொடங்கினான்.

     (இ - ள்.) முழுது உணர்ந்த முதல்வ - முற்று முணர்ந்த முதல்வனே,
நின் ஆடலை - உன் திருவிளையாடலை, இழுதையேன் அறியாது
அளந்தேன் எனா - அறிவிலியாகிய யான் அறியாமையால் அளக்கலுற்றேன்
என்று, அழுது இறைஞ்சி அபராதம் ஈந்து - அழுது வணங்கித் தண்டம்
இறுத்து, கைதொழுது நின்று துதிக்கத் தொடங்கினான் - கைகூப்பி நின்று
துதிக்கத் தொடங்கினான்.

     இழுதையேன் என்பதற்குப் பேயனேன் என்றும் பொய்யினேன் என்றும்
கூறலுமாம். அறியாது - அறியாமையால். அபராதம் - குற்றம், குற்றத்திற்குக்
கழுவாயாக இறுக்கும் தண்டம்; ஈண்டுத் தண்டத்தை யுணர்த்திற்று. (25)

  [கொச்சகக் கலிப்பா]
வேதியாய் வேத விளைபொருளாய் வேதத்தின்
நீதியாய் நீதி நெறிகடந்த நீளொளியாய்
ஆதியா யீறாய் நடுவா யவைகழிந்த
சோதியாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே.

     (இ - ள்.) வேதியாய் - வேதத்தை அருளியவனாகியும், வேத விளை
பொருளாய் - வேதத்தில் விளையும் பயனாகியும், வேதத்தின் நீதியாய் -
வேதங்கூறும் நீதியாகியும், நீதிநெறி கடந்த நீள் ஒளியாய் - அந்நீதி
நெறிகளைக் கடந்த நீண்ட ஒளியாகியும், ஆதியாய் ஈறாய் நடுவாய் அவை
கழிந்த சோதியாய் - முதலாகியும் முடிவாகியும் இடையாகியும் அவற்றுக்கு
அப்பாலான ஒளிவடிவாகியும், நின்றாய் - நின்றவனே, நின் இயல்பு -
இங்ஙனமாகிய நினது தன்மை, என் சோதனைத்தோ - என் சோதனையில்
அகப்படற்பாலதோ?

     வேதி - வேதத்தையுடையவன். வேத விளைபொருள் - வேதத்தின்
முடிந்த உண்மைப் பொருள். நீதியாய் நின்று அவவ்ழி யொழுகும் உயிர்கட்கு