II


374திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     சிதர் - கிழிந்த துணி. மதியையே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக.
மழுக்கு : வலித்தல் விகாரம். கூனல் குயம் - கொடுவாள். செருப்பினைத்
தாளில் இயைத்து என்றுமாம். (12)

பழைய தோர்பொல்லம் பொத்திய பத்தர்யாழ்க் கோறோள்
உழைய தாகவிட் டெருத்தலைத் தூசலா டியவொண்
குழைய காதினிற் களவிணர்க் *குறியகாய் தூக்கித்
தழையும் வார்சிகை சரிந்திடச் சுமையடை தாங்கி.

     (இ - ள்.) பழையது - பழையதாகிய, பொல்லம் பொத்திய -
தைக்கப்பட்ட, ஒர் பத்தர் யாழ்க்கோல் - ஒரு பத்தரையுடைய வீணையின்
தண்டானது, தோள் உழையது ஆகவிட்டு, தோளினிடத்ததாகத் தொங்க
விட்டு, எருத்து அலைத்து ஊசல் ஆடிய - பிடரியை அலைத்து ஊசல் போல்
அலைந்தாடிய, ஒண்குழைய காதினில் - ஒள்ளிய குண்டலத்தை யணிந்த
திருச்செவியில், கள இணர்க்குறிய காய் தூக்கி - களாவின் பூங்கொத்தோடு
கூடிய சிறிய காயினைத் தொங்கவிட்டு, தழையும் வார்சிகை சரிந்திட -
தழைந்த நீண்ட சிகை சரிய, சுமையடை தாங்கி - சும்மாடு தாங்கி. பொல்லம்
பொத்தல் - கிழிந்ததனை மூட்டுதல்; தைத்தல். பத்தர் - யாழின் உறுப்புகளுள்
ஒன்று. - சுமையடை என்பது சும்மாடு என வழங்குகிறது. (13)

தறிந்த விந்தனந் தினந்தொறுந் தாங்கிநீள் பங்கி
பறிந்து தேய்ந்தழுந் தியதலை யுடையராய்ப் பரிந்து
மறிந்த கங்கையும் பங்குறை மங்கையுங் காணா
தெறிந்த விந்தனச் சுமைதிரு முடியின்மே லேற்றி.

     (இ - ள்.) தறிந்த இந்தனம் - முறியுண்ட விறகினை, தினந்தொறும்
தாங்கி - நாள்தோறுஞ் சுமந்து, நீள்பங்கி பறிந்து தேய்ந்து அழுந்திய
தலையுடையராய் - நீண்ட மயிர் கழியப்பட்டுத் தேய்ந்து பள்ளமாகிய
தலையினை உடையவராய், பரிந்து மறிந்த கங்கையும் - அன்பு கூர்ந்து
(முடியில்) மடங்கிய கங்கையும், பங்கு உறை மங்கையும் காணாது - பாகத்தில்
உறையும் அங்கயற்கண் ணம்மையும் காணாமல், எறிந்த இந்தனச் சுமை திருமுடியின்மேல் ஏற்றி - வெட்டிய விறகின் சுமையைத் திருமுடியின் மேல்
ஏற்றி.

     தறிந்த - தறியுண்ட; தறிக்கப்பட்ட. தினந்தோறும் தாங்கினமையாற்
பறிந்து தேய்ந்தழுந்திய தலை போன்று தலையுடையராய் என்பது கருத்து.
மறிந்த - அலை மடங்குகின்ற. அவர் காணின் பொறாராகலின் காணாதபடி
முடியின் மேல் ஏற்றினர் என்க. (14)


     (பா - ம்.) * களவினற் குறிய.