II


விறகுவிற்ற படலம்377



     (இ - ள்.) பறவை வாய் அடைத்து - ஆண் பறவைகள் வாய் திறந்து
ஒலிக்காமல், அருகு அணை பார்ப்பொடும் பெடையை -பக்கத்தில் வந்து
அணையும் குஞ்சுகளையும் பெட்டையையும், சிறகரால் அணைத்து -
சிறகினால் அணைத்து, இரும்பொழில் குடம்பையுள் செறிய - பெரிய
சோலையிலுள்ள தங்கள் கூட்டில் அடங்கவும், நறவம் உண்ட பெடைவாய்
தேன் - தேனை உண்ட பெண் வண்டின் வாயிலுள்ள தேனை, வண்டு நக்கி
- ஆண் வண்டு நக்கி, ஓடைப் பொறைகொள் தாமரைப் பள்ளியுள் -
ஓடையிலுள்ள தம்மைச் சுமத்தலையுடைய தாமரையாகிய படுக்கையுள், புகுந்து
கண் படுக்க - புகுந்து உறங்கவும்.

     மாலைப் பொழுதில் பறவைகள் ஒலியடங்குதல் இயல்பு. சிறகர், போலி.
(19)

புல்லெ னீணிலைக் குரங்கினம் பொதுபர்புக் குறங்க
முல்லை யாய்மகா ருய்த்தரக் கன்றுள்ளி முந்திக்
கொல்லை யானிரை மனைதொறுங் குறுகிடச் சிறுபுன
கல்வி மாணவச் சிறார்பயில் கணக்கொலி யடங்க.

     (இ - ள்.) நீள் புல்லென் நிலைக் குரங்கு இனம் - மிக்க புல்லென்ற
தன்மையுடைய குரங்கின் கூட்டங்கள், பொதும்பர் புக்கு உறங்க - சோலை
சென்று தூங்கவும் - முல்லை ஆய் மகார் உய்த்தர - முல்லை நிலத்திலுள்ள
ஆயச் சிறுவர்கள் செலுத்த, கொல்லை ஆன் நிரை - அந்நிலத்துப் பசுவின்
கூட்டங்கள், கன்று உள்ளி - கன்றுகளை நினைத்து, மனைதொறும் முந்திக்
குறுகிட - வீடுகள் தோறும் முற்பட்டுச் செல்லவும், சிறுபுள் கல்வி மாணவச்
சிறார் - ஆரம்பக் கல்வி பயிலும் மாணவச் சிறுவர்கள், பயில் கணக்கு ஒலி
அடங்க - பயிலுகின்ற நெடுங்கணக்கின் ஒலி அடங்கவும்.

     புல்லெனல் - பொலிவின்றியிருத்தல். ஆய் - ஆயச்சாதி. சிறுபுன் சிறார்
என்றுமாம், சிறுபுன், ஒரு பொருளிருசொல். கணக்கொலி - நெடுங்கணக்கை
முறைவைத் தோதும் ஒலி. (20)

புனைந்த வாழ்கடற் கரும்படா முடம்பெலாம் போர்த்து
வனைந்த பூண்முலை நிலமக டுயில்வது மானக்
கனைந்த காரிருண் மெல்லெனக் கவிதரப் பிரிவால்
இனைந்த காதலர் நெஞ்சில்வே ளெரிகணை நாட்ட.

     (இ - ள்.) பூண் வனைந்த முலை நிலமகள் - ஆரம் அணிந்த
முலைகளையுடைய நிலமாது, புனைந்த - தான் உடுத்திருந்த, ஆழ்கடல்,
கரும்படாம் - ஆழ்ந்த கடலாகிய கரிய ஆடையை, உடம்பு எலாம் போர்த்து
- உடம்பு முழுதும் போர்த்து, துயில்வதுமான - உறங்குவதுபோல, கனைந்த
கார் இருள் - செறிந்த கரிய இருளானது, மெல்லெனக் கவி தர - மெல்லென
வந்து உலகினைப் போர்க்கவும், பிரிவால் இனைந்த காதலர் நெஞ்சில் -
பிரிவினால் வருந்திய காதலர்களுடைய நெஞ்சின் கண், வேள் எரிகணை
நாட்ட - மன்மதன் எரிகின்ற அம்புகளை நாட்டவும்.