II


378திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     அருவியாகிய ஆரம்பூண்ட மலைகளாகிய கொங்கைகளையுடைய
நிலமகள் என்க. மருங்கில் உடுத்த கரிய ஆடையை உடல் முழுதும்
போர்த்து உறங்கினாற் போல எனக் கூறிய நயம் பாராட்டற்பாலது, இரவில்
உயிர்களெல்லாம் வினையொழிந்திருத்தலின் 'நிலமகள் துயில் வதுமான'
என்றது மிக்க பொருத்தமுடைத்து. (21)

திங்கள் வாணுதன் முயற்கறைத் திலகமுஞ் சிவந்த
மங்கு லாடையு மயங்கிரு ளோதியும் வான்மீன்
பொங்கு மாரமும் பொலிந்துதன் கொண்கனைப் பொருப்பன்*
மங்கை தேடிவந் தாளென வந்தது மாலை.

     (இ - ள்.) திங்கள் வாள் நுதல் - சந்திரனாகிய ஒள்ளிய நெற்றியில்,
முயற்கறைத் திலகமும் - முயற்களங்கமாகிய பொட்டும், சிவந்த மங்குல்
ஆடையும் செல்வானமாகிய ஆடையும், மயங்கு இருள் ஓதியும் - மயங்கிய
இருளாகிய கூந்தலும், வான்மீன் பொங்கும் ஆரமும் - விண்மீன்களாகிய
விளங்குகின்ற ஆரமுமாகிய இவைகளால், பொலிந்து - விளங்கி, பொருப்பன்
மங்கை - மலையரையன் புதல்வியாகிய உமை, தன்கொண்கனை - தனது
நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை, தேடி வந்தாள் என - தேடி வந்தாள்
என்னும்படி, மாலை வந்தது - மாலைப் பொழுது வந்தது.

     சிவந்த மங்குல் - செவ்வானம். மயங்குதல் - கலத்தல்; மயக்கஞ்
செய்தலுமாம். கரிய நிறமுடைய உமை செவ்வாடையுடுத்துக் கூந்தலை
ஒப்பனை செய்து திலகமும் ஆரமும் பூண்டு, தன்னைப் பிரிந்து விறகு சுமந்து
போந்த இறைவனைத் தேடி வந்தாற் போல என்க. வரவு நேர்ந்து என்னுஞ்
செய்யுள் முதலாகக் கூறி வந்த செயவெனெச்சங்கள் இச் செய்யுளிலுள்ள
வந்தது என்னும் வினை கொண்டு முடியும். மாலை பொலிந்து வந்தது என
முடிக்க. (22)

எடுத்த விந்தன மொருபுறத் திறக்கியிட் டூன்றி
அடுத்த வன்புறந் திண்ணைமீ தமர்ந்திளைப் பாறித்
தொடுத்த வின்னிசை சிறிதெழீஇப் பாடினார் சுருதி
மடுத்தி யாரவன் பாடுவா னென்றிசை வல்லான்.

     (இ - ள்.) எடுத்த இந்தனம் - சுமந்து வந்த விறகு கட்டை, ஒரு
புறத்து இறக்கி ஊன்றி இட்டு - ஒரு பக்கத்தில் இறக்கி ஊன்றி வைத்து,
அடுத்தவன் புறம் திண்ணை மீது அமர்ந்து - வந்தவனாகிய ஏமநாதனது
வெளித் திண்ணையின் மேல் அமர்ந்து, இளைப்பாறி - வந்த இளைப்பினைப்
போக்கி, தொடுத்த இன் இசை சிறிது எழீஇப் பாடினார் - தொடுத்த
இனிமையையுடைய இசையைச் சிறிது எழுப்பிப் பாடினார்; இசை வல்லான் -
இசையில் வல்ல ஏமநாதன், சுருதி மடுத்து - அவ்விசையினைக் கேட்டு,
பாடுவான் அவன் யார் என்று - பாடுவானாகிய அவன் யாவன் என்று கருதி.


     (பா - ம்.) * பொருப்பின் மங்கை.