II


விறகுவிற்ற படலம்383



"கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா
பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலவை
கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர்
உள்ளாளப் பாட லுணர்"

என்னும் இசைமரபுச் செய்யுளாலும்,

"விரனான் கமைத்த வணிகுரல் வீங்காது
நான்மறை துள்ளும் வாய்பிள வாது
காட்டியுள் ளுணர்த்து நோக்கமா டாது
பிதிர்கனல் மணிசூழ் முடிநடுக் காது
வயிறு குழிவாங்கி யழுமுகங் காட்டாது"

என்னும் கல்லாடச செய்யுளாலும் அறிக. (29)

வெள்ளைகா குளிகீ ழோசை வெடிகுர னாசி யின்ன
எள்ளிய வெழாலின் குற்ற மெறிந்துநின் றிரட்ட லெல்லை
தள்ளிய கழிபோக் கோசை யிழைத்தனெட் டுயிர்ப்புத் தள்ளித்
துள்ளலென் றின்ன பாடற் றொழிற்குற்றம் பிறவுந் தீர்ந்தே.

     (இ - ள்.) வெள்ளை - நிறமில்லாத வெள்ளோசையும், காகுளி -
இன்னாவோசையும், கீழோசை - கட்டையிசையும், வெடிகுரல் - வெடித்த
குரலும், நாசி - மூக்கோசையும், இன்ன - இவை போல்வனவுமாகிய, எள்ளிய
எழாலின் குற்றம் - (இசை நூலார்) விலக்கிய மிடற்றோசையின் குற்றங்களும்,
எறிந்து நின்று இரட்டல் - விலங்கி நின்று ஒலித்தலும், எல்லை தள்ளிய கழி
போக்கு - அளவு கடந்த கழி போக்கும், ஓசை இழைத்தல் - ஓசை புரிதலும்,
நெட்டுயிர்ப்புத் தள்ளித் துள்ளல் - பெருமூச்செறிந்து துள்ளலும், என்று
இன்ன பாடல் தொழில் குற்றம் - என்று சொல்லப்பட்ட இவை முதலான
பாடற்றொழிற் குற்றங்களும், பிறவும் - பிற குற்றங்களும், தீர்ந்து - நீங்கி.

     காகுளி - பேய் கத்தினாற்போற் பாடுதல். கீழோசை - நிறமும்
தானமும் குறைந்த கட்டையிசை. நாசி - ஒரு தானத்தே பாட ஒரு தானத்தே
நழுவுதல் என்றுமுரைப்பர். எறிந்து நின்றிரட்டல் - ஒரு பண்ணைப் பாட
வேறொரு பண்ணில் விலங்கி நின்றொலித்தல் கழிபோக்கு - ஓசை பலவாய்
மிக்குச் செல்லுதல். ஓசை பிழைத்தல் - காக்கை கத்தினாற்போற் கத்துதல்
என்பர்.

"நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை
பேசாக் கீழிசை யொருபுற மோடல்
நெட்டுயிர்ப் பெறிதல் எறிந்துநின் றிரட்டல்
ஓசையிழைத்தல் கழிபோக் கென்னப்
பேசுறு குற்ற மசைவொடு மாற்றி"

என்று கல்லாடத்துள் வருதல் காண்க.(30)