(இ
- ள்.) விஞ்சையர் சிலர் - யாழ் விஞ்சைவல்ல காந்தருவருட் சிலர்,
வீணைகை வழுக்கிச் சோர்வார் - வீணை கையினின்றும் நழுவி வீழச்
சோர்வடைவர், சிலர் - மற்றுஞ் சிலர், விரல் நடாத்தும் யாழ் நரம்பு எழாலும் -
விரலால் வருடியெழுப்பப்படும் யாழ் நரம்பின் இசையும், கண்டத்து எழாலும் வேறாக வேர்ப்பர்
- மிடற்றினது இசையும் வேறாகுமாறு வேர்ப்பார்கள்;
சில்லோர் - வேறு சிலர், நாணமோடு உவகை துள்ள - நாணம் ஒரு பாலும்
மகிழ்ச்சி ஒருபாலும் ஓங்க, நாத்தலை நடுங்கி மயங்கி - நாவும் தலையும்
நடுங்கி மதிமயங்கி, தங்கள் மாண் இழையவர் மேல் வீழ்வார் - தத்தம் சிறந்த அணிகளையுடைய
மகளிர் மேல் வீழ்வர்.
விஞ்சையர்
- விச்சாதரர் என்றுமாம். எழால் - இன்னிசை. யாணரம்புக்கு மேல் உரைத்தது காண்க.
(38)
போதுளான் பரமன் பாதப் போதுளா னானான் வேலை
மீதுளான் பரமா னந்த வேலைமீ துள்ள னானான்
தாதுளாங் கமலக் கண்போற் சதமக னுடல மெல்லாங்
காதுளா னல்லே னென்றான் கண்ணுளான் கானங் கேட்டு. |
(இ
- ள்.) கண்ணுளான் கானம் கேட்டு - நுதற் கண்ணுடைய
சிவபெருமான் பாடியருளிய தேவகானத்தினைக் கேட்டு, போதுளான் பரமன்
பாதம் போதுளான் ஆனான் - தாமரை மலரில் இருக்கும் பிரமன்
அவ்விறைவனுடைய திருவடித் தாமரையின் கீழுள்ளவனானான்; வேலை
மீதுளான் - கடலின் மேல் அறிதுயில் கொள்ளுந் திருமால், பரமானந்த
வேலை மீது உள்ளான் ஆனான் - பேரின்பக் கடலில் உள்ளவனானான்;
சதமகன் - இந்திரன், தாது உள் ஆம் கமலக் கண்போல் - அகத்தே
மகரந்தத்தையுடைய தாமரை மலர் போன்ற கண்களைப் போல, உடலம்
எல்லாம் - உடல் முற்றும், காது உளான் அல்லேன் என்றான் -
செவிகளையுடைய னல்லேனாயினேன் என்று கூறி வருந்தினான்.
இசையானது
சிவானந்தத்தை விளைத்தமையின் இறைவன் திருவடியிற்
கலந்தார் போலாயினான் என்பார் 'பாதப் போதுளானானான்' என்றார்.
போதுளான் பாதப் போதுளான் என்றும், வேலை மீதுள்ளான் பரமான்ந்த
வேலை மீதுள்ளான் என்றும் கூறிய நயம் பாராட்டற்பாலது. கண்ணுளான்
என்பதற்குக் கூத்தியற்றுபவன் என்றுரைப்பாருமுளர். (39)
முனிவருந் தவத்த ராதி முத்தர்மா சித்த ரன்பன்*
துனிவரும் பழங்கண் டீர்ப்பான் சுந்தரத் தோன்றல் கீதம்
கனிவருங் கருணையென்னுங் கடலிலன் பென்னு மாற்றிற்
பனிவருங் கண்ணீர் வெள்ளம் பாய்ந்திட வின்பத் தாழ்ந்தார். |
(இ
- ள்.) முனிவு அரும் - வெறுப்பு, (விருப்பு) அற்ற, தவத்தர்
ஆதிமுத்தர் மாசித்தர் - தவத்தரும் சீவன் முத்தரும் பெரிய சித்தரும்,
(பா
- ம்.) * அன்பின் துனிவரும்.
|