II


394திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



அன்று பத்திரன் கனவில்வந் தாடலேற் றழகர்
இன்று பத்திர விசைவலா னிடைவிற் காளாய்ச்
சென்று பத்திர னடிமையா மென்றுபாண் செய்து
வென்று பத்திரஞ் செய்துநின் வேண்டுகோ ளென்றார்.

     (இ - ள்.) ஆடல் ஏற்று அழகர் - வெற்றியையுடைய
இடபவூர்தியையுடைய சோம சுந்தரக் கடவுள், அன்று பத்திரன் கனவில்
வந்து - அன்று பாணபத்திரன் கனவில் வந்து, பத்திர - பாணபத்திரனே,
நின் வேண்டுகோள் - உன் வேண்டுகோளின்படியே, இசைவலான் இடை -
இசையில் வல்ல அவ்வேமநாதனிடத்து, விறகு ஆளாய் இன்று சென்று -
விறகாளாக இன்று போய், யாம் பத்திரன் அடிமை என்று - யாம்
பாணபத்திரன் அடிமை என்று கூறி, பாண் செய்து - இசை பாடி, வென்று
பத்திரம் செய்தும் என்றார் - வென்று நின்றைக் காத்தனம் என்றருளிச்
செய்தார்.

     பாண் செய்து - என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு
தாழ்ச்சி செய்து என்றும் உரைத்துக் கொள்க.

"பணிந்து பாண் செய்த தன்றே"

என்னும் சிந்தாமணித் தொடருக்கு நச்சினார்க்கினியர் இங்ஙனம் பொருள்
கூறினமை காண்க;

"பாண்பேசிப் படுதலையிற் பலி கொள்கை தவிரீர்"

எனத் தேவாரத்தில் பாண் பேசி என்பது தாழ்ச்சி சொல்லி என்னும்
பொருளில் வந்திருத்தலும் கருதுக. செய்தும் - செய்தோம். வேண்டுகோளால்
என மூன்றனுருபு விரிக்க. (51)

குஞ்சி நாண்மலர்க் கொன்றையா ரங்ஙனங் கூறும்
நெஞ்சி னானினைப் பரியசொற் கேட்டலு நெஞ்சம்
அஞ்சி னானிது செய்யவோ வடியனேன் மறைகட்
கெஞ்சி னாரையின் றிரந்தவா றென்றுகண் விழித்தான்.

     (இ - ள்.) குஞ்சி நாள்மலர்க் கொன்றையார் - முடியின்கண்
அன்றலர்ந்த கொன்றை மலர் மாலையையுடைய இறைவர், அங்ஙனம்
கூறும் - அவ்வாறு கூறியருளிய, நெஞ்சினால் நினைப்பரிய சொல் -
நெஞ்சினாலும் நினைத்தற்கரிய சொல்லை, கேட்டலும் - கேட்டவளவில்,
நெஞ்சம் அஞ்சினான் - மனந் துணுக்குற்று, இது செய்யவோ -
இக்காரியம் செய்தற்கோ, அடியனேன் மறைகட்கு எஞ்சினாரை இன்று
இரந்தவாறு என்று -அடியனேன் வேதங்களுக்கு மெட்டாத இறைவரை
இன்று குறையிரந்தபடி யென்று, கண் விழித்தான் - கண் விழித்தெழுந்தான்

.      நெஞ்சினால் நினைப்பரியய சொல் - விறகாளாய்ச் சென்று 'பத்திர
னடிமையாம்' என்று கூறிய சொல். (52)