செய்தனை என - நீ
என்ன செய்தாய் என்று வினவ, இசைப் பெருமான் -
இசைத் தலைவனாகிய பத்திரன், தென்னர் கோன் அடிதொழுது -
பாண்டியர் மன்னனாகிய வரகுணனின் அடிகளை வணங்கி, தன் செய்தியை
மொழிவான் - தனது செய்தியைக் கூறுவானாயினன்.
இங்கினும்
- இவ்விடத்தினின்றும்; இன : நீக்கப்பொருட்டு. (62)
நென்னல் வாயடி யேனின தாணிழ னீங்கிப்
பின்னல் வார்சடை மௌலியெம் பிரானடி பணிந்தேன்
இன்ன லார்குறை யிரந்துமீண் டிருக்கைபுக் கிருந்தேன்
கன்ன லார்மொழி பங்கரென் கனாவில்வந் தருளி. |
(இ
- ள்.) நென்னல் வாய் - நேற்றைப் பொழுதில், அடியேன்
நினதாள் நிழல் நீங்கி - அடியேன் உன்னுடைய அடி நிழலை நீங்கிச்
சென்று, பின்னல் வார் சடை மௌலி - பின்னிய நீண்ட சடையாகிய
முடியினையுடைய, எம்பிரான் அடி பணிந்தேன் - எம் பிரானாகிய சோம
சுந்தரக் கடவுளின் திருவடிகளைப் பணிந்து, இன்னல் ஆர் குறை இரந்து
மீண்டு - துன்ப மிக்க குறைபாடுகளை இரந்து கூறி மீண்டு, இருக்கை புக்கு
இருந்தேன் - இல்லிற் புகுந்து இருந்தேன்; கன்னல் ஆர்மொழி பங்கர் -
கரும்பு போலும் மொழியினையுடைய உமையைப் பாகத்திலுடைய
அவ்விறைவர், என் கனாவில் வந்தருளி - எனது கனவின்கண் வந்தருளி.
வாய் : ஏழனுருபு. நின : அகரம் ஆறன் பன்மையுருபு. பணிந்தேன் :
முற்றெச்சம். ஆர் : உவமச் சொல்லாக நின்றது. மொழி : ஆகு பெயர்.
(63)
ஓடி யுன்பொருட் டாகநாம் விறகெடுத் துழன்று
வாடி நின்பகைப் புறங்கடை வந்துசா தாரி
பாடி வென்றுநின் பகைவனைத் துரந்தன மெனச் சொல்
ஆடி னார்விழித் தேனிது நிகழ்ந்ததென் றறைந்தான். |
(இ
- ள்.) உன் பொருட்டாக - உன் நிமித்தமாக, நாம் ஓடி விறகு
எடுத்து உழன்று வாடி - நாம் ஓடி விறகு சுமந்து திரிந்து வாடி, நின்
பகைப் புறங்கடை வந்து - நின் பகைவனாகிய ஏமநாதன் தலைவாயிலிற்
சென்று, சாதாரி பாடி வென்று - சாதாரிப் பண்ணைப் பாடி வென்று, நின்
பகைவனைத் துரந்தனம் எனச் சொல் ஆடினார் - அவனை ஓட்டி
விட்டேமெனக் கூறியருளினார்; விழித்தேன் - யானுங் கண் விழித்தேன்;
இது நிகழ்ந்தது என்று அறைந்தான் - இது தான் நடந்த செய்தி என்று
கூறினான்.
பகைப்
புறங்கடை - பகைவனது இல்லின் புறங்கடை. சொல்லாடினார்
- சொல்லினார். சொல்லியவளவில் விழித்தேன் என்க. (64)
|