II


பலகையிட்ட படலம்425



இறையரு ளாணை யஞ்சி யிட்டபொற் பலகை யேறி
நறைகெழு மதுர கீதம் பாடிநான் மறைகள் சூடும்
அறைகழ லகத்துட் கொண்டு பலகையு மங்கை கொண்டு
மறைவழி யாழ்வல் லோன்றன் மனைவயிற் செல்லு மெல்லை.

     (இ - ள்.) இறை அருள் ஆணை அஞ்சி - இறைவன் அருளிய
ஆணையை (மறுத்தற்கு) அஞ்சி, இட்ட பொன்பலகை ஏறி - அவன்
இட்டருளிய பொன்னாலாகிய பலகையில் ஏறி, நறை மதுரம் கெழு கீதம்
பாடி - தேனின் சுவை பொருந்திய இசையினைப் பாடி, நான்மறைகள்
சூடும் - நான்கு வேதங்களும் முடியிற் சூடிய, அறைகழல் அகத்துள்
கொண்டு - ஒலிக்கின்ற வீரக்கழ அணிந்த திருவடியை உள்ளத்திற்
கொண்டு - பலகையும் அங்கை கொண்டு - அப்பலகையையும் கையிலேந்தி,
மறைவழி யாழ்வல்லோன் - இசை நூலின் வழியே யாழ் வாசித்தலில்
வல்லவனாகிய பாணபத்திரன், தன் மனையில் செல்லும் எல்லை - தனது
இல்லிற்குச் செல்லும் பொழுது.

     இசை நூலும் மறை எனப்படுதலை.

"நரம்பின் மறைய வென்மனார் புலவர்"

என்று தொல்காப்பியர் கூறுதலானறிக. (14)

மின்னுமா மேக நீங்கி விசும்புவாய் விளங்கித் தென்றல்
மன்னுமா மலய மேய மாதவன் குடித்த வைகற்
பொன்னுமா மணியு முத்தும் புலப்படக் கிடந்த வேலை
என்னமீன் விளங்கித் தோன்ற வேகியில் புகுந்தா னிப்பால்.

     (இ - ள்.) தென்றல் மன்னும் மாமலயம் மேய - தென்றற் காற்று
நிலை பெற்ற பெரிய பொதியின் மனையிற்றங்கிய, மாதவன் குடித்த வைகல்
- பெரிய தவத்தினையுடைய அகத்திய முனிவன் பருகிய ஞான்று, வேலை
- கடலின்கண், பொன்னும் மாமணியும் முத்தும் புலப்படக் கிடந்த என்ன
- பொன்னும் சிறந்த மணிகளும் முத்தும் வெளிப்படக் கிடந்தாற்போல,
மின்னும் மாமேகம் நீங்கி - மின்னுகின்ற கரிய முகில்கள் நீங்கப்பெற்று,
விசும்புவாய் விளங்கி - வானம் விளக்க முறுதலால், மீன் விளங்கித்
தோன்ற - விண் மீன்கள் புலப்பட்டுத் தோன்றா நிற்க, ஏகி இல்புகுந்தான்
- சென்று வீட்டிற் புகுந்தனன்; இப்பால் பின்பு.

     விசும்புவாய் - வானின் இடம். விளங்கி : காரணப்பொருட்டாய
செய்தெனெச்சம். வேலையிற் புலப்படக் கிடந்தவென்ன விசும்பிலே
விளங்கித்தோன்ற என்க. மேக நீங்கிய விசும்பிற்கு நீர்வறந்த கடலும்,
விண்மீன்களுக்குப் பொன் முதலியவும் உவமம். (15)


     (பா - ம்.) * மலையின்மேய.