II


428திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



நாற்பத்து நான்காவது இசைவாது வென்ற படலம்

[எண்சீரடி யாசிரிய விருத்தம்]
பகூட லம்பதியி லாடக மேருக்
     கொடிய விற்குரிசி லடியவ னுக்குப்
பாட லின்பரிசி லாசிய செம்பொற்
     பலகை யிட்டபடி பாடின மன்னான்
வீட ரும்பொருவில் கற்புடை யாளோர்
     விறலி யைப்பரம னிறையருள் பற்றி
மாட கஞ்செறியும் யாழ்வழி பாடி
     வாது வென்றவர லாறு மிசைப்பாம்.

     (இ - ள்.) அம் கூடல் பதியில் - அழகிய மதுரைத் திருநகரில்
எழுந்தருளிய, ஆடக மேருக்கொடிய வில்குரிசில் - பொன்மேருவாகிய
வளைந்த வில்லையேந்திய சோமசுந்தரக் கடவுள், அடியவனுக்கு -
அடியானாகிய பாணபத்திரனுக்கு, காடலின் பரிசில் ஆகிய - (அவன்) பாட
லுக்குப் பரிசிலாக, செம்பொன் பலகை இட்டபடி பாடினம் - சிவந்த
பொற்பலகை அருளிய திருவிளையாடலைக் கூறினேம்; அன்னான் - (இனி)
அப் பாணபத்திரனது, வீடு அரும் பொருஇல் கற்பு உடையாள் -
அழிதலில்லாத ஒப்பற்ற கற்பினையுடைய மனைவியார், பரமன் நிறை
அருள்பற்றி - இறைவனது நிறைந்த திருவருளைப் பற்றுக்கோடாகக்
கொண்டு, மாடகம் செறயும் யாழ்வழி பாடி - முறுக்காணி செறிந்த யாழின்
வழியே பாடி, ஓர் விறலியை வாது வென்ற வரலாறும் இசைப் பாம் - ஒரு
பாடினியை வாதில் வென்ற திருவிளையாடலையுங் கூறுவாம்.

     கொடிய - வளைவுடைய; கொடுமை - வளைவு; கோடிய என்பதன்
விகாரமுமாம். ஆகிய : செய்யிய வென்னும் வினையெச்சம். (1)

வரகு ணன்கதி யடைந்தபி னம்பொன்
     மௌலி சூலிய விராச விராசப்
புரவ லன்புவி மடந்தையை வேட்டுப்
     புயந்த ழீஇக்கொடு நயந்தரு நாளிற்
பரவு மன்பதை புரந்தொழு கந்தப்
     பஞ்சவற் குரிய ரஞ்சன வுண்கண்
மரகின் வந்தமட வார்பல ரேனை
     மையல் செய்யுமட வார்பலர் மாதோ.