II


432திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இன்இசை பாடுவார் - இங்கு என்னுடன் இனிய இசை பாடுகின்றவர்,
உளர்கொலோ என்று வந்திருக்கின்றனள் - உளரோ என்று சொல்லிக்
கொண்டு வந்திருக்கின்றனள்.

     தகை - ஈண்டுக் கற்பு. உள்ளத்தில் ஒன்று கருதி வாயால் மற்றொன்று
கூறுகின்றான் என்பார் ‘உளத்தொன்று புறத்தொன்று சாற்றம்’ என்றார்.
என்னொடு - எனக்கு ஒப்பாக. (7)

ஆட மைத்தடந் தோளினா யவளொடுங் கூடப்
பாட வல்லையோ பகரெனப் பாடினி பகர்வாள்
கோட ருந்தகைக் கற்புமிக் கூடமெல் பெருமான்
வீட ருங்கரு ணையுமெனப் கிருக்கலால் வேந்தே.

     (இ - ள்.) ஆடு அமை தடம் தோளினாய் - அசையும் மூங்கிலை
ஒத்த பெரிய தோளினையுடையாய், அவளொடும் கூடப் பாட வல்லையோ
- நி அவளுடன் ஒப்பாக நின்று பாடுதற்கு வலியுடையையோ, பகர் என -
கூறுவாயாக என்று வினவ, பாடினி பகர்வாள் - விறலி கூறுவாள்; வேந்தே -
அரசே, கோடு அரும் தகைக் கற்பும் - மாறுதலில்லாத பெருமையையுடைய
கற்பும், இக்கூடல் எம்பெருமான் - இந்த நான்மாடக் கூடலில் எழுந்தருளிய
எம் பெருமானது, வீடு அருங் கருணையும் - அழிதலில்லாத அருளும்,
எனக்கு இருக்கையால் - எனக்குத் துணையாக இருத்தலினால்.

     கூட - ஒப்பாக. கோள்தரும் எனப் பிரித்து உறுதியைத் தருகின்ற
என்றுரைத்தலுமாம். (8)

பாடி வெல்வதே யன்றிநான் பரிபவ முழந்து
வாடு வேனலே னென்றுரை வழங்கலு மதுக்கால்
ஏடு வார்குழ லவளையு மிருக்கையுய்த் திருந்தான்
நீடு வார்திரைப் பொருநையந் தண்டுறை நிருபன்.

     (இ - ள்.) பாடி வெல்வதே அன்றி - அவளொடு பாடி நான் வெற்றி
பெறுவதேயல்லாமல், பரிபவம் உழந்து வாடுவேன் அலேன் என்று உரை
வழங்கலும் - தோல்வியினால் வருந்தி வாட்டமுறேன என்று கூறிய வளவில்,
மதுக்கால் ஏடு வார் குழல் அவளையும் - தேன்பொழியும் மலரிதழை யணிந்த
நீண்ட கூந்தரையுடைய அப் பாடினியையும், இருக்கை உய்த்து இருந்தான் -
அவள் இருப்பிடத்திற்குப் போக விடுத்து இருந்தான்; நீடு வார்
திரைப்பொருநை அம் தண்துறை நிருபன் - நீண்ட பெரிய அலைகளையுடைய
தாமிரபன்னியின் அழகிய தண்ணிய துறைகளையுடைய பாண்டிமன்னன்.

     பரிபவம் - துன்பம்; மானக்கேடுமாம். நீடு வார் என்பன ஒரு பொருள்
குறித்தன; மிக்க என்றபடி. பாடினி உரை வழங்கலும் நிருபன் அவளையும்
உய்த்து இருந்தான் என்க. (9)