தென்னரே றனையாய் ஞால மனுவழிச் செங்கோ லோச்சும்
மன்னரே றனையாய் வார வழக்கினை யாத லானீ
சொன்னவா றவையுஞ் சொல்லத் துணிந்தது துலைநா வன்ன
பன்னகா பரணர் முன்போய்ப் பாடுகேம் பாடு மெல்லை. |
(இ
- ள்.) தென்னர் ஏறு அனையாய் - பாண்டியருள் ஆண்சிங்கம்
போல்வாய், ஞாலம் - இந்நில வுலகில், மனுவழி செங்கோல் ஓச்சும் மன்னர்
ஏறு அனையாய் - மனுவறத்தின் வழியே செங்கோல் செருத்தும்
மன்னர்களுள் ஏறுபோல்வாள், வாரவழக்கினை - நீதான் அன்பின் வழி
நின்று வழக்கினை ஒருந் தன்மையை யுடையையாயினை; ஆதலால் நீ
சொன்னவாறே - ஆதலினால் நீ நடுநிலை யிகந்து கூறியவண்ணமே,
அவையும் சொல்லத் துணிந்தது - அசையிலுள்ளாரும் கூறத் துணிந்தனர்;
துலைநா அன்ன - தராசின் நாப்போலும் நடுநிலைமையுள்ள பன்னக
ஆபரணர் முன்போய்ப் பாடுகேம் - அரவினை அணியாகக் கொண்ட
சோமசுந்தரக் கடவுளின் திருமுன் சென்று யாங்கள் பாடுவேம்; பாடும்
எல்லை - அங்ஙனம் பாடுங்கால்.
நடுநின்று
முறைபுரியும் இறையாகிய நீயும் எம்மில் ஒரு புறத்து
வாரம்பற்றி வழக்குரைப்பாயாயினை, அவைய மாந்தரும் நின்வழிக் கூறினர்
ஆகலின் இனி என்றும் கோடாத வாய்மையுடைய சிவபிரான் திருமுன்
சென்று பாடுவோம் என்றாள் என்க. பன்னகா பரணர் : வட மொழி நெடிற்
சந்தி. (25)
இருவரேம் பாட்டுங் கேட்டுத் துணிந்திவள் வென்றா ளென்னா
ஒருவர்சந் நிதியிற் சொன்னாற்போதுமென் றுரைத்தாள் பாண்டித்
திருமக னனைய வாறே செய்மினீர் செய்மி னென்ன
மருவளர் குழலி னார்த மனைபுகுந் திருந்தார் பின்னாள். |
(இ
- ள்.) இருவரேம் பாட்டும் கேட்டு - எங்களிருவரின் பாடலையும்
கேட்டு, ஒருவர் துணிந்து - யாரேனும் ஒருவர் மனந்துணிந்து. இவள்
வென்றாள் என்னா - இருவருள் இவள்தான் வென்றனள் என்று, சந்நிதியில்
செசன்னால் போதும் என்று உரைத்தாள் - அவ்விறைவன் திருமுன்
சொன்னால் அமையும் என்று கூறினாள், பாண்டித் திருமகன் - இராசராச
பாண்டியன், அனைய வாறே நீர் செய்மின் செய்மின் என்ன - அங்ஙனமே
நீர் செய்யுமென்று கூற, மருவளர் குழலினார் தம் மனை புகுந்து இருந்தார் -
மணம் ஓங்கும் கூந்தலையுடைய அவ்விறலியர் இருவரும் தத்தம் இல்லிற்
சென்று தங்கினர்; பின் நாள் - மறுநாளில்.
செய்மின்
செய்மின் : துணிவுப்பொருளில் வந்த அடுக்குத்தொடர். (26)
|