II


பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம்475



     (இ - ள்.) ஓடுகின்றன - (அக்குட்டிகள் தாய் தந்தையரைத் தேடி)
ஓடுகின்றன; தெருமரல் உறுவன - (காணாமையால்) சுழலுகின்றன; நிழலைத்
தேடுகின்றன - நிழலைத் தேடி அலைகின்றன; தாய் தீயமுலைப் பால் வேட்டு
வாடுகின்றன - தாயினது இனிய முலைப்பாலை விரும்பி வாட்டமடைகின்றன;
தாகம் வெம்பசி நனிவருத்த வீடுகின்றன - நீர் வேட்கையும் கொடிய பசியும்
மிகவுந் துன்புறுத்தலால் உயிர் சோருகின்றன; வெயில் சுட வெதும்புகின்றன -
வெயில் சுடுதலால் வெதும்பி வருந்துகின்றன.

     தீய - இனிய. ஆல் : அசை. (57)

இன்ன வாறிவை யணங்குறு மெல்லைவேல் வல்ல
தென்ன ராகிய தேவர்க டேவரங் கயற்கண்
மின்ன னாளொடு மின்னவிர் விமானமீ தேறி
அன்ன கானகத் திச்சையா லாடல்செய் திருந்தார்.

     (இ - ள்.) இவை இன்னவாறு அணங்குறும் எல்லை - இக்குட்டிகள்
இங்ஙனந் துன்புறும் பொழுது, வேல்வல்ல - வேலாற் செய்யும் போரில் வல்ல,
தென்னராகிய தேவர்கள் தேவர் - சுந்தர பாண்டியராகிய தேவர்கள்
தேவராகும் இறைவர், அங்கயற்கண் மின் அனாளொடு - மின்னலை ஒத்த
அங்கயற் கண்ணம்மையோடு, மின் அவிர் விமான மீது ஏறி - ஒளி விளங்கும் விமானத்தின் மேலேறியருளி, அன்ன கானகத்து - அந்தக் காட்டின்கண்,
இச்சையால் ஆடல் செய்திருந்தார் - தமதிச்சையினால் திருவிளையாடல்
புரிந்து கொண்டிருந்தார்.

     இச்சையாவது உயிர்க்கு அருள் நேசமாகும். (58)

ஏன மென்பற ழுறுகணோய்க் கிரங்கினா ரிச்சை
ஆன வன்புதந் தத்துய ரகற்றுவா னீன்ற*
மான வன்புடைப் பேடையின் வடிவெடுத் தயருங்
கான வன்பறழ் கலங்கஞர் கலங்கநேர் வந்தார்.

     (இ - ள்.) ஏனம் மென் பறழ் உறுகண் நோய்க்கு இரங்கினார் -
மென்மையுடைய அப்பன்றிக் குட்டிகளின் துன்ப நோய்க்கு இரங்கி, இச்சை
ஆன அன்பு தந்து - விருப்பமாகிய அன்பினை வைத்து, அத்துயர்
அகற்றுவான் - அத்துன்பத்தையொழித்தருள, ஈன்ற மான அன்பு உடைப்
பேடையின் வடிவு எடுத்து - அவற்றை ஈன்ற மிக்க அன்பினையுடைய பெண்
பன்றியின் வடிவினை எடுத்து, கானம் அயரும் - காட்டின்கண் சோருகின்ற,
வன்பறழ் - வலிய அக்குட்டிகளின், கலங்கு அஞர் கலங்க - கலங்குதற்
கேதுவாகிய பசித்துன்பம் கலங்கி நீங்குமாறு, நேர் வந்தார் - எதிரே
வந்தருளினார்.

     இளமை பற்றி மென்பறழ் என்றும், சாதி பற்றி வன்பறழ் என்றும்
கூறினாரெனக் கொள்க. மானம் ஈண்டு மிகுதியை உணர்த்திற்று.


     (பா - ம்.) * அகற்றுவானின்ற.