II


நாரைக்கு முத்திகொடுத்த படலம்505



     (இ - ள்.) என்றும் இத்தடம் மீன் இலவாக - எஞ்ஞான்றும்
இவ்வாவியின்கண் மீன்கள் இல்லையாகுமாறு, நன்று சால்வரம் நீ நன்கு
என - நன்மை நிறைந்த அவ்வரத்தினை நீ அருளக் கடவை என்று வேண்ட,
மாவெள்ளி மன்றுளானும் வரம் தந்து போயினான் - பெரிய வெள்ளியம்
பலத்தையுடைய சோம சுந்தரக் கடவுளும் அவ்வரத்தை அருளி மறைந்தனன்;
நாரை சிவலோகம் சென்று சேர்ந்தது - நாரை சிவலோகத்தைச்
சென்றடைந்தது. ஆல் : அசை. (21)

இயங்க ளைந்து மியம்ப விமானமேற்
புயங்க ணான்குமுக் கண்களும் பொற்பவான்
வியங்கொள் பூமழை வெள்ளத்து ளாழ்ந்துபோய்
வயங்கொ ணந்தி கணத்துள் வதிந்ததே.

     (இ - ள்.) இயங்கள் ஐந்தும் இயம்ப - தேவ துந்துபிகள் ஐந்தும்
ஒலிக்க, விமானமேல் - விமானத்தின் மேலேறி, புயங்கள் நான்கும் முக்
கண்களும் பொற்ப - நான்கு தோள்களும் மூன்று கண்களும் அழகு செய்ய,
வான் வியம் கொள் பூமழை வெள்ளத்துள் ஆழ்ந்து போய் - வானுலகோர்
பொழிந்த பெருமை பொருந்திய மலர் மழையாலாகிய வெள்ளத்தில் மூழ்கிச்
சென்று, வயம் கொள் நந்தி கணத்துள் வதிந்தது - வெற்றியையுடைய நந்தி
கணங்களுள் ஒன்றாய்த் தங்கியது.

     புயங்கள் நான்கும் முக்கண்களும் பொற்ப என்றமையால் சிவச ரூபம்
பெற்றுச் சென்றதென்க. வியம் - பெருமை. நந்தி கணம் - சிவ கணம். (22)

அன்று தொட்டின் றளவும்பொற் றாமரை
என்று ரைக்கு மெழின்மல ரோடையிற்
சென்று கைத்துத் திரிகின்ற மீனலால்
ஒன்று மற்றன நீர்வா ழுயிர்களும்.

     (இ - ள்.) அன்று தொட்டு இன்று அளவும் - அன்று முதல் இந்நாள்
காறும், பொற்றாமரை என்று உரைக்கும் - பொற்றாமரை என்று சொல்லப்
படும், எழில் மலர் ஓடையில் - அழகிய மலர்களையுடைய அவ்வாவியின்கண்,
சென்று உகைத்துத் திரிகின்ற மீன் அலால் - ஓடித் துள்ளி விளையாடும்
மீன்களேயன்றி, நீர் வாழ் உயிர்களும் ஒன்றும் அற்றன - ஏனைய நீர் வாழ்
உயிர்களும் சிறிதுமின்றி ஒழிந்தன. (23)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
தன்கிளை யன்றி வேற்றுப் பறவைக டாமுந் தன்போல்
நன்கதி யடைய வேண்டிற் றேகொலிந் நாரை செய்த
அன்பினில் வியப்போ வீச னருளினில்*வியப்போ வன்பர்க்
கின்புரு வான வீச னன்பருக் கெளிதே யைய.+

     (பா - ம்.) * ஈசனருளன்பர்க்கு. +எளிதேயை.