II


52திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



[அறுசீரடியாசிரிய விருத்தம்]  
நீனிற நீத்த நீந்து நிழன்மதி யிரண்டுண் டென்ன வானிற வலயச் சங்க வார்குழை நுழைவித் தம்பூம் பானிற வெகினங் காணாப் படர்சடை மறைத்துத் தோற்றுங் கானிறை குஞ்சிச் சூட்டிற் களிமயிற் கலாபஞ் சூடி.

    (இ - ள்.) நீல்நிற நீத்தம் நீந்தும் நிழல் மதி இரண்டு உண்டு என்ன -
நீலநிறத்தையுடைய இருளாகிய கடலை நீந்தும் திங்கள் இரண்டுள்ளன
என்னும்படி, வால்நிற வலயச் சங்கம் வார்சுகுழை நுழைவித்து -
வெண்ணிறத்தையுடைய வட்டமாகிய சங்கினாலாகிய நீண்ட குண்டலங்களை
(இருகாதிலும்) புகுத்தி, அம்பூம் பால் நிற எகினம் காணாப் படர்சடை
மறைத்து -அழகிய தாமரை மலரில் வசிக்கும் வெண்ணிறத்தையுடைய
பிரமனாகிய அன்னப் பறவை காணாத படர்ந்த சடையினை மறைதது,
தோற்றும் கான்நிறை குஞ்சிச் சூட்டில் களிமயில் கலாபம் சூடி -
தோன்றுகின்ற மணம் நிறைந்த மயிர் முடியிலே களிக்கின்ற மயிலின்
தோகையை அணிந்து.

     நீலம் என்பது கடை குறைந்தது. நீல நிறத்தையுடைய கடல்
எனக்கொண்டு நிழல் மதி இரண்டுண்டாயின் அவற்றை யொப்ப என
விரித்துரைத்தலுமாம். காரொளியுடைய உடம்பின் இருபுறத்திலும்
குண்டலங்கள் அசையுந் தோற்றம் நீல நிற நீத்தத்தை இரண்டு மதிகள்
நீந்துவனபோன்றிருந்தது. சங்க வலயம் வார்குழை நுழை வித்து எனச்
சொல்வகை செய்து சங்கக் குண்டலத்தை நெடிய காதில் நுழைவித்து
என்றுரைத்தலுமாம். பூவும் நிறமும் அன்னத்திற்கும் பிரமனுக்கும் பொது. சூடு -
உச்சியிலுள்ள மயிர் முடி; கண்ணியெனக் கொண்டு, குஞ்சியிலுள்ள
கண்ணியுடன் கலாபத்தைச் சூடி என்றுரைப்பினும் அமையும். (25)

கருங்கடன் முளைத்த செக்கர்க் கதிரெனக் குருதிக் கச்சை
மருங்குற வீக்கிச் சோரி வாயுடை வாளுங் காட்டி
இரங்குநான் மறைக ளேங்க விருநிலந் தீண்டு தாளிற்
பொருங்கழல் வளைத்து வாளிப் புட்டிலும் புறத்து வீக்கி.

     (இ - ள்.) கருங்கடல் முளைத்த செக்கர் கதிர் என - கரிய கடலிற்
றோன்றிய செவ்வொளியையுடைய பரிதி என்னும்படி, குருதிக் கச்சை மருங்கு
உற வீக்கி - செந்நிறத்தையுடைய கச்சையினை அரையிற் பொருந்தக் கட்டி,
சோரிவாய் உடைவாளும் கட்டி - குருதி ஒழுகும் வாயினையுடைய
உடைவாளைம் இதன் புறத்தே செறித்து, இரங்கும் நான்மறைகள் ஏஙக
இருநிலம் தீண்டு தாளில் - ஒலிக்கின்ற நான்கு மறைகளும் ஏங்கப் பெரிய
நிலத்தைத தீண்டுகின்ற திருவடியில், பொருங்கழல் வளைத்து - போருக்குரிய
வீரக்கழலை அணிந்து, வாளிப் புட்டிலும் புறத்து வீக்கி - அம்புக்
கூட்டினையும் முதுகிலே கட்டி.

     குருதிக் கச்சை - குருதிபோலும் செந்நிறமுடைய கச்சை. ஏங்கல் -
மனம்வாடி இளைத்தல். ஏங்க - ஏங்கும்படி; ஏங்காநிற்க என்றுமாம். (26)