II


60திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     ஏவல் செய்த - ஏவிய; மத்தக் குன்றில் ஏவிய அம்பு என்க, தூணின்
உள்ளிருந்து அது பிளக்க அன்று தோன்றிய நரசிங்கத்தைப்போல
இந்நரசிங்கக் கணையானது யானையின் உட்புகுந்து பிளந்து வெளிப்பட்டது
என்க. செம்புள் - கலுழன். ஆய்தல் - ஈண்டுச் சிந்தித்தல். செம்புளாய்க்
கொடிய என்னும் பாடத்திற்கு, கருடவடிவாய்க் கொடியினை யுடைய
என்றுரைக்க. அன்று, ஏ : அசைகள். திருமாலானவர் தம் அடியானாகிய
பிரகலாதன் பொருட்டு, அவன் தந்தை யாகிய இரணியனால் அறையப்பட்ட
தூணினின்றும் தோன்றி அவனைக் கொன்றருளினன் என்பதும், இரணியனைக்
கொன்ற நரசிங்கம் செருக்குற்று உலகை யழக்கத் தொடங்கிய காலையில்
சிவபெருமான் சிம்புளின் உருக்கொண்டு அதனைக் கொன்றருளினர் என்பதும்
வரலாறு. சரப வடிவங்கொண்டது வீரபத்திரக் கடவுள் என நூல்கள் கூறினும்
அவர் சிவ மூர்த்தங்களுள் ஒருவராகலின் அமையுமென்க. நரசிங்கம்
தூணினின்றும் போந்ததனை,

"நசைதிறந் திரங்கப் பொங்கி நன்றுநன் றென்ன நக்கு
விசைபிறந் துருமு வீழ்ந்த தென்னவோர் தூணின் வென்றி
இசைதிறந் தமர்ந்த கையா லெற்றினா னெற்ற லோடும்
திசைதிறந் தண்டங் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்"
"பிளந்தது தூணு மாங்கே பிறந்தது சீயம் பின்னை
வளர்ந்தது திசைக ளெட்டும் பகிரண்ட முதல மற்றும்
அளந்ததப் புறத்துச் செய்கை யாரறிந் தறைய கிற்பார்
கிளர்ந்தது ககன மூட்டை கிழிந்தது கீழு மேலும்"

என்னும் கம்பராமாயணச் செய்யுட்களால் அறிக. (41)

[எழுசீரடியாசிரிய விருத்தம்]
உலகெலா மழித்து மீளவுண் டாக்கு முருத்திரன் வீரசத் தியினிற்
சிலதரித் திறவா வவுணன்மார் பிடந்த சிங்கநா யகனை யங்கெய்தி
அலகின்மா தவஞ்செய் துரோமசன் றன்பே ரறியவோர்
                                      தீர்த்தமுண்டாக்கி
இலகுபே றடைந்தான் பிரகலா தனுநோற் றீறிலாப் பெருவர
                                          மடைந்தான்.

     (இ - ள்.) உலகு எலாம் அழித்து மீள உண்டாக்கும் உருத்திரன் -
எல்லாவுலகங்களையும் அழித்து அவற்றை மீளவும் படைத்தருளும் உருத்திர
மூர்த்தியின், வீரசத்தியினில் சில தரித்து - வீரசத்திகளுட் சிலவற்றை
அவனருளாற் பெற்று, இறவா அவுணன் மார்பு இடந்த சிங்க நாயகனை -
இறவாத அவுணனாகிய இரணியனது மார்பினைப் பிளந்த நரசிம்ம மூர்த்தியை,
உரோமசன் அங்கு எய்தி அலகு இல் மாதவம் செய்து - உரோமச முனிவன்
அங்கே சென்று (வழிபட்டு) அளவிறந்த பெரிய தவங்களைச் செய்து, தன்பேர்
அறிய ஓர் தீர்த்தம் உண்டாக்கி இலகு பேறு அடைந்தான் - தனது பெயர்
விளங்க ஒரு தீர்த்தம் உண்டாக்கிப் பெரும் பேற்றினை அடைந்தான்;
பிரகலாதனும் நோற்று ஈறு இலாப் பெருவரம் அடைந்தான் - பிரகலாதனும்
அங்குத் தவஞ்செய்து அழியாத பெரிய வரங்களைப் பெற்றான்.