II


64திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) அந்தணாளனும் அதிசயித்து - விரூபாக்கனும் வியப்புற்று,
பெறல் அரும் மகட்கு - பெறுதற்கரிய புதல்விக்கு, சிந்தை ஆர்வமோடு
இறைவினைச் செப்ப - உள்ளத்தி லெழுந்த அன்புடன் பராசத்தியின்
திருமந்திரத்தைக் கூற, முந்தை நாள் அருந்தவக் குறை முடித்திட வந்தாள்
- முற்பிறப்பிற் செய்த அரிய தவத்தின் குறையை நிரப்புதற்கு வந்த
கௌரியம்மை, தந்தைபால் அது தெளிந்து - பிதாவினிடத்தில் அதனைக்
கேட்டுத் தெளிந்து, நா தழும்பு உற பயின்றாள் - நாவானது
தழும்படையும்படி அதனை ஓதி வந்தாள்.

     குழவிப் பருவத்திலே பிறவினை யொழிக்க வேண்டு மென்னும்
பேரறிவு தோன்றியனமை குறித்து அதிசயித்தான். மனு - மந்திரம்.
தெளிந்து - தெளியக் கேட்டுணர்ந்து; பொருளும், ஓதுமுறையும் நன்கு
உணரவேண்டுமாகலின் ‘தெளிந்து’ என்றார். இடைவிடாது பயின்றாள்
என்பார் ‘நாத்தழும்புறப் பயின்றாள்’ என்றார். பயிலுதல் - உருவேற்றுதல்;
செபித்தல். வந்தாள் : பெயர். வந்தவளாகலின் பயின்றாள் என்பது
கருத்து. (5)

தாதை தன்றவக் கொழுந்தினுக் கிசையமா சைவ
மாத வத்தனா யாதியாச் சிரமத்தில் வழங்கும்
வேத வித்துமாய் மரபினான் மேம்படு வானெப்
போது போதுமென் றுளத்தொடு புகன்றுகொண்டிருந்தான்.

     (இ - ள்.) தாதை - தந்தையானவன், தன் தவக் கொழுந்தினுக்கு
இசைய - தனது தவக்கொழுந்தாகிய புதல்விக்குப் பொருந்த, மாசைவ
மாதவத்தனாய் - பெருமை பொருந்திய சைவநெறி நின்ற பெரிய
தவத்தினையுடையனாய், ஆதி ஆச்சிரமத்தில் வழங்கும் வேத வித்துமாய் -
முதல் நிலையாகிய பிரமசரிய நெறியில் ஒழுகும் வேத வித்துமாகி, மரபினால்
மேம்படுவான் - மரபினாலு முயர்ந்த ஒருவன், எப்போது போதும் என்று -
எப்பொழுது (மணவாளனாக) வருவான் என்று, உளத்தொடு புகன்று கொண்டு
இருந்தான் - மனத்துடன் கூறிக் கொண்டிருந்தான்.

     மாசைவம் - சைவத்தின் ஒரு வகையாகிய மகாசைவம் என்னலுமாம்.
ஆதி - ஆச்சிரமம் - நான்கு நிலைகளுள் முதலது; பிரமசரியம். வேதவித்து
- வேதங்களை யறிந்தவன். மரபு - குடிப்பிறப்பு; கோத்திரம் முதலியவுமாம்.
போதும் - வருவான்; புகுதும் என்பதன் மரூஉ. இடைவிடாது சிந்தித்துக்
கொண்டிருந்தான் என்பதனை இலக்கணை வகையால் ‘உளத்தொடு புகன்று
கொண்டிருந்தான்’ என்றார். (6)

பருவ நாலிரண் டாகமேற் கடிமணப் பருவம்
வருவ தாகவங் கொருபகல் வைணவப் படிவப்
பிரம சாரியாய்க் கடைதொறும் பிச்சைபுக் குண்பான்
ஒருவன் வந்தனன் பலிக்கவ ணயற்புலத்* துள்ளான்.

     (இ - ள்.) பருவம் நாலிரண்டு ஆக - (புதல்விக்கு) எட்டு வயது ஆக,
மேல் கடிமணப் பருவம் வருவது ஆக - மேலே திருமணப் பருவம்


     (பா - ம்.) * னயற்புலத்.