II


விருத்தகுமார பாலரான படலம்65



வராநிற்க, ஒரு பகல் - ஒருநாள், அயற் புலத்து உள்ளான் - வேற்றூரில்
உள்ளவனும், வைணவப் படிவப் பிரமசாரியாய் - வைணவக் கோலமுடைய
பிரமசரியனாய், கடைதொறும் பிச்சை புக்கு உண்பான் ஒருவன் - வாயில்
தோறும் பலி ஏற்று உண்பவனுமாகிய ஒருவன், அவண் பலிக்கு வந்தனன் -
அவ்விடத்திற் பிச்சைக்கு வந்தான்.

     அங்கு - அப்பொழுதில் என்க. வைணவப் படிவ முடையனாயும்
பிரமசாரியாயும் என விரித்துக் கொள்க. புக்கு - புகுந்து; ஏற்றலாகிய
காரியத்தை யுணர்த்திற்று. (7)

பிச்சை வேண்டினா னவற்குத்தன் பெண்ணினைக் கொடுப்பான்
இச்சை கூர்ந்தருந் தவத்தினால் வருந்தியீன் றெடுத்த
விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவா
தச்ச மின்றிநீ ரெடுத்தவ னங்கையிற் பெய்தான்.

     (இ - ள்.) பிச்சை வேண்டினான் அவற்கு - (அங்ஙனம் வந்து) பிச்சை
கேட்ட அப்பிரமசாரிக்கு, தன் பெண்ணினைக் கொடுப்பான் இச்சை கூர்ந்து -
தன் புதல்வியைக் கொடுத்தற்கு விருப்பங் கொண்டு, அருந் தவத்தினால்
வருந்தி ஈன்றெடுத்த விச்சை வேதியன் - அதிய தவத்தினாலே உடல்
வருந்திப் பெற்றெடுத்த கற்றுவல்ல மறையவனாகிய விரூபாக்கன்,
மனையொடு சுற்றமும் வினவாது - மனைவியையும் சுற்றத்தாரையும் கேளாது,
அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான் - அச்சமு
மில்லாமல் நீரினை எடுத்து அவனுடைய அகங்கையில் வார்த்தான்.

     வேண்டினனன், பெயரெச்சமாயிற்று. கொடுப்பான் : வினையெச்சம்.
புதல்வி மேலுள்ள அன்பும் தனது கல்வியறிவும் இதனைக் தடுத்தில
வென்பார் ‘அருந்தவத்தினால் வருந்தி யீன்றெடுத்த விச்சைவேதியன்’
என்றார். ஒரு தலையாக வினவுதற் குரியாரையும வினாவிற்றிலன் என்பார்
‘மனையொடு சுற்றமும் வினாவாது’ என்றார். மனைவி முதலாயினார்
இணங்காவிடின் யாது செய்வதென்ற அச்சமும், தன் புதல்வி எத்தகைய
இன்னலுறுவாளோ என்ற அச்சமும் இன்றி யென்க, எங்ஙனம் பெய்தான்
என்பதனை வருஞ்செய்யுளிற் காண்க. (8)

கலிக்கு நூபுரச் சீறடிக் கன்னிதன் விதியும்
பலிக்கு வந்தவ னல்வினைப் பகுதியுந் துரப்ப
ஒலிக்கு மந்திரச் சிரகநீ ரொழுக்கினான் முந்திச்*
சலிக்கு மன்னையுந் தமர்களுங் கேட்டுளந் தளர்வார்.

     (இ - ள்.) கலிக்கும் நூபுரச் சீறடிக்கன்னிதன் விதியும் - ஒலிக்கின்ற
சிலம்பினை யணிந்த சிறிய அடியையுடைய கௌரியின் கன்மமும், பலிக்கு
வந்தவன் நல்வினைப் பகுதியும் - பிச்சைக்கு வந்தவனது நல்வினையின்
கூறும், துரப்ப - செலுத்துதலால், முந்தி - முற்பட்டு, ஒலிக்கும் மந்திரம் சிரக
நீர் ஒழுக்கினான் - ஒலிக்கின்ற மந்திரத்தோடு கமண்டல நீரை வார்த்தான்;


     (பா - ம்.) * முந்தச்