II


66திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கேட்டு சலிக்கும் அன்னையும் தமர்களும் உளம் தளர்வார் - (அதனைக்)
கேட்டு வருந்துகின்ற தாயும் உறவினரும் மனந்தளர்வாராயினார்.

     கன்னிதன் விதி - இவனுக்கு மனைவியாக வேண்டு மென்னும் பிராரத்த
கன்மம். நல்வினை பலதிறப் படுமாகலின் ‘பகுதி’ என்றார். இவன் தன்வயம்
இழந்தனன் என்பார் ‘துரப்ப’ என்றார். முந்தி - விரைந்து. மந்திரத் தோடு
என விரிக்க. கன்னிகையைத் தானஞ் செய்தற்குரிய மந்திரத்துடன் தாரை
வார்த்தான் என்றவா றாயிற்று. தளர்வார் : முற்றெச்சம். (9)

குலனு மோர்கிலன் கோத்திர மோர்கிலன் குடிமை
நலனு மோர்கில னொழுக்கமுங் கல்வியு நண்ணுந்
தலனு மோர்கிலன் கன்னியைத் தத்தஞ்செய் தானெப்
புலனு மோர்ந்தவன் விதிவழி மதியெனப் புலந்தார்.

     (இ - ள்.) குலனும் ஓர்கிலன் - குலத்தையும் ஓராது, கோத்திரம்
ஓர்கிலன் - கோத்திரத்தையும் ஓராது, குடிம நலனும் ஓர்கிலன் -
குடிப்பிறப்பின் மேன்மையையும் ஓராது, ஒழுக்கமும் கல்வியும் நண்ணும்
தலனும் ஓர்கிலன் - ஒழுக்கத்தையும் கல்வியையும் இருக்கும் இடத்தினையும்
ஓராது, எப்புலனும் ஓர்ந்தவண் கன்னியை தத்தம் செய்தான் - எல்லா
நூல்களையு மறிந்தவன் தன் புதல்வினைத் தத்தஞ் செய்து விட்டான்,
விதிவழி மதி எனப் புலந்தார் - யாவர்க்கும் விதியின் வழியே மதிசொல்லும்
என்று வாடினர்.

     ஓர்கிலன் என்னும் எதிர்மறை முற்றுக்கள் எச்சமாயின; கு : சாரியை,
அல் : எதிர்மறை இடைநிலை. ஓர்தல் - ஆராய்ந்தறிதல். இவை யெல்லாம்
ஆராய்தற் குரியவாகவும் இவற்றுள் ஒன்றும் ஆராய்ந்திலன் என்றார்.

"நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்உண்மை
யறிவே மிகும்"


என்பவாகலின், ‘எப்புலனு மோர்ந்தவன்’ என்றும், ‘விதிவழி மதி என்றும்
கூறினார். (10)

மற்ற வன்குடி கோத்திரஞ் சூத்திர மற்றும்
உற்ற றிந்துநம் மரபினுக் கொக்குமான் மாயோன்
சொற்ற தந்திர வைணவத் தொடக்குண்டு திரியுங்
குற்ற மொன்றினி மறுப்பதென் கொடுப்பதென் றிசைந்தார்.

     (இ - ள்.) அவன் குடி கோத்திரம் சூத்திரம் மற்றும் உற்று அறிந்து -
அவனுடைய குடியையும் கோத்திரத்தையும் சூத்திரத்தையும் பிறவற்றையும்
பொருந்தியறிந்து, நம் மரபினுக்கு ஒக்கும் - (இவன்குடி முதலிய வெல்லாம்)
நமது மரபுக்கு ஒத்திருக்கின்றன; மாயோன் சொற்ற தந்திர வைணவத்
தொடக்குண்டு திரியும் குற்றம் ஒன்று - (இவன்) திருமால் கூறிய நூலின்
வழிப்பட்ட வைணவ மதக் கட்டுண்டு ஒழுகும் குற்ற மொன்று தான் உளது;