II


நான்மாடக்கூடலான படலம் 7



இறைவனைப் போல, விசும்பும் பாரும் திசைகளும் தெரியாவாக - விண்ணும்
மண்ணும் திசைகளும் தோன்றாதவாறும், பார்த்தகண் நுழையாவாக -
நோக்கிய கண்கள் (இருட் செறிவால் உள்) நுழையாத வாறும், பரந்து இருள்
கான்ற - பரவி இருளைத் தோற்றுவித்தன.

     மேல் இரண்டு செய்யுளிலும் போந்த செயவெ னெச்சங்களை,
இச்செய்யுளிலுள்ள ‘ஆர்த்தெழு’ என்பது கொண்டேனும், ‘போர்த்தன’
என்பது கொண்டேனும் முடிக்க. போர்த்தன : முற்றெச்சம். வடிவம் -
பிரளயகால உருத்திரவடிவம். அன்று, ஏ : அசைகள். (9)

பைஞ்சுட ரெறிக்கும் பச்சை காரொளி பரப்பு நீலம்
புஞ்சவா ளுடுக்க ளன்ன நிலத்திலம் பொன்னங் குப்பை
செஞ்சுடர் மணிக டுப்புச் சிதறுவ கணவரொடும்
விஞ்சையர் மகளி ரூடி வெறுத்தெறி கலன்கள் போல.

     (இ - ள்.) பைஞ்சுடர் எறிக்கும் பச்சை - பசிய ஒளியினை வீசும்
மரகதங்களையும், கார் ஒளி பரப்பும் நிலம் - கரிய ஒளியினை வீசும் நீல
மணிகளையும், புஞ்சம் வாள் உடுக்கள் அன்ன நித்திலம் - திரண்ட ஒள்ளிய
விண் மீன்களை யொத்த முத்துக்களையும், பொன்னம் குப்பை -
பொற்குவியலையும், செஞ்சுடர் மணிகள் - சிவந்த ஒளியினையுடைய மாணிக்க
மணிகளையும், துப்பு - பவளங்களையும், விஞ்சையர் மகளிர் கணவரோடும்
ஊடி - விஞ்சையரின் மகளிர்கள் நாயகரோடும் புலந்து, வெறுத்து
எறிகலன்கள் போலச் சிதறுவ - வெறுப்புற்று எறிகின்ற அணிகள் போலச்
சிந்தாநின்றன.

     புஞ்சம் - திரட்சி. பொன்னம், அம் : சாரியை. விசும்பினின்று
வீழ்தலால் விஞ்சையர் மகளிரைக் கூறினார். ஏழு மேகங்களுள்
சம்வர்த்தம் என்பது மணிகளையும், புட்கலாவர்த்தம் என்பது
பொன்னையும் பொழிவனவாமென்க. (10)

கடியகா லுதைப்பப் பெய்யுங் கடுஞ்செல வெழிலி மாடக்
கொடியநீ னகரைச் சூழ்ந்து புதைத்தலுங் கோலொன் றோச்சிப் படியெலாம் புரக்குங் கோனு நகருளார் பலரு ஞாலம்
மடியுநா ளிதுவே யென்னா மயங்கினா ருயங்கி னாரே.

     (இ - ள்.) கடியகால் உதைப்ப - வேகமாகிய காற்று அடித்துத் தாக்க,
பெய்யும் கடஞ்செலவு எழிலி - மழையைப் பொழியும் கடிய
செலவினையுடைய மேகங்கள், கொடிய மாட நீள் நகரைச் சூழ்ந்து
புதைத்தலும் - கொடிகளையுடைய மாடங்கள் நெருங்கிய நீண்ட நகரைச்
சூழ்ந்து மூடிய வளவில், கோல் ஒன்று ஓச்சி படி எலாம புரக்கும் கோனும் -
தனிச் செங்கோல் நடாத்தி உலக மனைத்தையும் காக்கும் அபிடேக
பாண்டியனும், நகர் உளார் பலரும் - நகரத்திலுள்ளவர் பலரும், ஞாலம்
மடியும் நாள் இதுவே என்னா மயங்கினார் உயங்கினார் - உலகம் அழியும்
நாள் இதுவே யென்று மன மயங்கி வாடினார்கள்.

     கொடிய, கொடி யென்னும் பெயரடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.
கோல் ஒன்று ஓச்சல் - தனிச்செங்கோல் செலுத்தல்; பொதுவறப் புரத்தல்.
உயங்குதல் - வாடுதல். மயங்கினார் : வினையச்சப் பொருட்டாயது. (11)