II


8திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கண்ணுதல் மூர்த்தி தானே யின்னமுங் காக்கு மென்னாப்
புண்ணிய நகரா ரோடும் பொருக்கெனக் கோயி லெய்தி
விண்ணிழி விமான வாழ்க்கை விடையவனடிக்கீழ் வீழ்ந்தான்
அண்ணலா ராடன் முன்னு மறிந்துகை கண்ட வேந்தன்.

     (இ - ள்.) அண்ணலார் ஆடல் முன்னும் அறிந்து கைகண்ட வேந்தன்
- சோம சுந்தரக் கடவுளின் திருவிளையாடலை முன்னரும் உணர்ந்து கைவந்த
பாண்டி மன்னன், கண்ணுதல் மூர்த்தி தானே இன்னமும் காக்கும் என்னா -
நெற்றியிற் கண்ணையுடைய அவவிறைவனே இன்னமும் காத்தருளுவனென்று,
புண்ணிய நகராரோடும் பொருக்கெனக் கோயில் எய்தி - அறம் மிகுந்த
நகரத்திலுள்ளவரோடும் விரைந்து திருக்கோயிலை யடைந்து, விண் இழி
விமான வாழ்க்கை விடையவன் அடிக்கீழ் வீழ்ந்தான் - வானுலகினின்றும்
இறங்கிய விமானத்தின்கண் அமர்ந்தருளும் இடப வூர்தியையுடைய
சொக்கலிங்க மூர்த்தியின் திருவடியின்கீழ் விழுந்தான்.

     முதற்கண் உலக மழியுங்கால மென்று மயங்கிய பாண்டியன், இறைவன்
றிருவிளையாடலை முன் அறிந்து வைத்தவனாகலின் தெளிவுற்றுக் கோயிலை
யடைந்தானென்க. தானே, தான் அசை : ஏ : தேற்றம். இன்னமும் : உம்மை
இறந்தது தழுவிய எச்சம். புண்ணியம் நகருக்கு அடை. பொருக்கென :
விரைவுக்குறிப்பு. (12)

விடையினை யால முண்ட மிடற்றினை கங்கை தாங்குஞ்
சடையினை கூற்றை வென்ற தாளினை மேருச் சாபப்
படையினை யடியேந் துன்பப் பாட்டினை நீக்கி யாளும்
நடையினை யாகி* யெங்க ணல்லுயிர் காத்தல் வேண்டும்.

     (இ - ள்.) விடையினை - இடபவூர்தியையுடையாய், ஆலம் உண்ட
மிடற்றினை - நஞ்சை யுண்டருளிய திருமிடற்றினை யுடையாய், கங்கை
தாங்கும் சடையினை - கங்கையைத் தாங்கிய சடையினையுடையாய், கூற்றை
வென்ற தாளினை - கூற்றுவனை உதைத்த திருவடியை யுடையாய், மேரு
சாபப்படையினை - மேரு மலையாகிய விற்படையை யுடையாய், அடியேம்
துன்பப்பாட்டினை நீக்கி ஆளும் நடையினையாகி அடியேங்களின்
அல்லற்பாட்டினைப் போக்கி ஆளுகின்ற அருட் செயலை உடையையாகி,
எங்கள் நல் உயிர் காத்தல் வேண்டும் - எங்கள் இனிய உயிர்களைப்
பாதுகாத்தருளல் வேண்டும்.

     விடையினை, ஆலமுண்ட மிடற்றினை, கங்கை தாங்குஞ்சடையினை,
கூற்றை வென்ற தாளினை, மேருச்சாபப் படையினை என்னும் பெயர்கள்,
அடியேங்களின் துன்பத்தைப் போக்கிக் காத்தருள வல்லாய் என்னும்
கருத்தோடு கூடிய விசேடியங்கள் ஆகலின் கருத்துடையடை கோளியணி.
விடையினை முதலியவற்றில் இன் : சாரியை. ஐ : முன்னிலை விகுதி. துன்பம்
என்னும் பண்புப்பெயர் பாடு என்னும் விகுதி பெற்று ஒரு


     (பா - ம்.) * நடையினையாகில்.