II


96திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



உடையவன் அதுவே ஆக - உள்ளமும் உரையும் உடலுமாகிய இம்மூன்றும்
தன்னை ஆளாக வுடையவன் உடைமையாய் விட, பளகு இலா அன்பு தானே
படிவமாய் - குற்றமில்லாத அன்பே வடிவமாயிருந்து, பழிச்சலுற்றான் -
துதிக்கத் தொடங்கினான்.

     விளைதல் - முதிர்தல்; இனிமை மிகுதல். வண்டின், இன் உருபு ஒப்புப்
பொருட்டு. மதுவில் வீழ்ந்த வண்டு அதனை யுண்டு அதிரே மயங்கிக்
கிடத்தல் போலச் சச்சிதானந்தமாகிய வெள்ளத்தில் மூழ்கி அதனை யுண்டு
தற்போத மிழந்தான் என்றவாறு. கடல் வெள்ளம் போன்று இதுவும் உண்மை
அறிவு இன்பம் என்னும் மூன்று நீர்மை யுடையது என்பது போதர ‘முந்நீர்
வெள்ளம்’ என்று வெயர் கூறினார். உடையவன் - உலகுயிர்களை யெல்லாம்
உடைமையாகவும் அடிமையாகவும் உடையவன்; இறைவன். மூன்று
கரணங்களையும் இறைவனிடத்தே ஒப்புவித்தா னென்க. உடையவனது,
பன்மை யொருமை மயக்கம்.
(22)

           [கலிவிருத்தம்]
பெரியாய் சரணஞ் சிறியாய் சரணங்
கரியா கியவங் கணனே சரணம்
அரியா யெளியா யடிமா றிநடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்.

     (இ - ள்.) பெரியாய் சரணம் - பெரியதினும் பெரியவனே வணக்கம்;
சிறியாய் சரணம் - சிறியதினுஞ் சிறியவனே வணக்கம்; கரியாகிய
அங்கணனே சரணம் - சான்றாயுள்ள அழகிய கண்களை யுடையவனே
வணக்கம்; அரியாய் - தேவர்க்கும் அரியவனே, எளியாய் - அடியார்க்கு
எளியவனே, அடிமாறி நடம்புரிவாய் சரணம் - கால் மாறி நடம்புரிவோனே
வணக்கம்; புனிதா சரணம் - தூயவனே வணக்கம்.

     இறைவன் அண்ட மோரணுவாம் பெருமையும் அணுவோ ரண்டமாம்
சிறுமையும் உடையவனென்பது முன்னுங் கூறப்பட்டது. இறைவன் உயிருக்
குயிராயிருந்து காட்டிக் கண்டு நிற்பானாகலின் ‘கரியாகிய’ என்றார். சரணம்
- போற்றி யென்பது போல் வணக்கம் எனப் பொருள் படுவதொரு சொல்;
அடைக்கலம் என்றுமாம். (23)

நதியா டியசெஞ் சடையாய் நகைவெண்
மதியாய் மதியா தவர்தம் மதியிற்
பதியாய் பதினெண் கணமும் பரவுந்
துதியாய் சரணஞ் சுடரே சரணம்.

     (இ - ள்.) நதி ஆடிய செங்சடையாய் - கங்கை விளையாடுஞ் சிவந்த
சடையை யுடையவனே, நகைவெண் மதியாய் - ஒளிபொருந்திய வெள்ளிய