100திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     நீ வழிபட்டேத்தும் சடையார் என்க. ஞானப் பூங்கோதை என்னலுமாம்.
சலம் - பொய், வஞ்சனை, சலஞ்சாதித்தல் - வைரஞ் சாதித்தல் என்னும்
பொருளிலும் வழங்கும். (105)

கற்றைவார் சடையா னெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவா னின்னு மஞ்சா னும்பரார் பதிபோ லாகம்
முற்றுநீர் கண்ணா னாலு மொழிந்ததும் பாடல் குற்றங்
குற்றமே யென்றான் றன்பா லாகிய குற்றந் தேரான்.

     (இ - ள்.) கற்றைவார் சடையான் - திரண்ட நீண்ட சடையை யுடைய
இறைவன், நெற்றிக் கண்ணினைச் சிறிது காட்ட - நுதல் விழியைச் சிறிது
திறந்து காட்ட, பற்றுவான் - அதனாற் பற்றப்படுவானாகியும், இன்னும்
அஞ்சான் - இன்னும் அஞ்சாதவனாய், உம்பரார் பதிபோல் ஆகம் முற்றும்
நீர் கண்ணானாலும், மொழிந்த நும் பாடல் குற்றம் குற்றமே என்றான் -
கூறிய நுமது செய்யுள் குற்ற முடையதே என்று கூறினன்; தன் பால் ஆகிய
குற்றம் தேரான் - தன்னிடத்துள்ள குற்றத்தை அறியாத கீரன்.

     அவனைத் தீமை தீர்த்து ஆட்கொள்ளும் கருத்தின ரென்பார்
'கண்ணினைச் சிறிதே காட்ட' என்றார். உம்பரார் - விண்ணுலகிலுள்ளவர்
தேவர். வலியுறுத்துவான் 'குற்றங் குற்றமே' என்றான். (106)

              [கலிநிலைத்துறை]  
தேய்ந்த நாண்மதிக் கண்ணியா னுதல்விழிச் செந்தீப்
பாய்ந்த வெம்மையிற் பொறாதுபொற் பங்கயத் தடத்துள்
ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தன னவனைக்
காய்ந்த நாவல னிம்மெனத் திருவுருக் கரந்தான்.

    (இ - ள்.) தேய்ந்த நான்மதிக் கண்ணியான் - குறைந்த பிறைமதியாகிய
கண்ணியை உடைய இறைவனது, நுதல்விழிச் செந்தீ பாய்ந்த வெம்மையில் -
நெற்றிக் கண்ணின் செந்தழல் பற்றிய வெப்பத்தால், பொறாது - பொறுக்க
லாற்றாது, பொன் பங்கயத் தடத்துள் - பொற்றாமரை வாவியுள், ஆய்ந்த
நாவலன் போய் விழுந்து ஆழ்ந்தனன் - நூல்களை ஆராய்ந்தறிந்த நா
வல்லோனாகிய கீரன் சென்று விழுந்து அழுந்தினன்; அவனைக் காய்ந்த
நாவலன் - அவனைச் சினந்து ஒறுத்த புலவனாகிய சோமசுந்தரக் கடவுள்,
இம்மெனத் திருவுருக்கரந்தான் - விரைந்து தனது திருவுருவை
மறைத்தருளினான்.

     தனக்குப் பிழை செய்தாரும் மீட்டும் வந்தடைந்தால் அவர்க்கு அருள்
புரியும் இயல்பினன் என்பது தோன்ற 'தேய்ந்த நாண்மதிக் கண்ணியான்'
என்றார்; இது கருத்துடை யடையணி. இம்மென, விரைவுக் குறிப்பு. (107)

                      ஆகச் செய்யுள் - 2539