தக்கன்
வேள்வி அழித்தமையும் கூற்றைக் காய்ந்தமையும், இகலும்
சண்டிக்குக் கருணை பாலித்தமையும் சிறுவனுக்கு வாழ்நாள் அளித்ததையும்
அன்பும் ஆகும். தக்கன் வேள்வி புரியினும் அது மறமாதலும், சண்டி
வேதியனாகிய தாதையின் தாளைச் சேதிப்பினும் அஃது அறமாதலும்
முறையே அரனடிக்கு அன்பின்மையானும் அன்புடைமையானும் என்க.
"அரனடிக் கன்பர் செய்யும் பாவமும்
அறம தாகும்
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே" |
என்னும் சிவஞானசித்தித்
திருவிருத்தம் காண்க. (16)
சலந்தர
னுடலங் கீண்ட சக்கரப் படையாய் போற்றி
வலந்தரு மதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி
அலர்ந்தசெங் கமலப் புத்தே ணடுச்சிர மரிந்தாய் போற்றி
சிலந்தியை மகுடஞ் சூட்டி யரசருள் செல்வம் போற்றி. |
(இ
- ள்.) சலந்தரன் உடலம் கீண்ட சக்கரப் படையாய் போற்றி -
சலந்தராசுரன் உடலைப் பிளந்த திகிரிப்படையை யுடையவனே வணக்கம்;
வலம் தரும் அதனை - வெற்றிதரும் அப்படையினை, மாயோன் வழிபடக்
கொடுத்தாய் போற்றி - திருமால் வழிபாடு செய்ய அளித்தருளியவனே
வணக்கம்; அலர்ந்த செங்கமலப் புத்தேள் - மலர்ந்த செந்தாமரையில்
இருக்கும் பிரமனின், நடுச்சிரம் அரிந்தாய் போற்றி - நடுத்தலையை
அறிந்தவனே வணக்கம்; சிலந்தியை மகுடம் சூட்டி - சிலந்திக்கு முடிசூட்டி,
அரசு அருள் செல்வம் போற்றி - அரசு அருளிய செல்வமே வணக்கம்.
சலந்தரன்
உடல் கீண்ட சக்கரத்தை இறைவன் மாயோனுக்கு
அருளினமையை,
"செருமேவு சலந்தரனைப் பிளந்தசுட
ராழி
செங்கண்மலர்ப் பங்கயமாச் சிறந்தானுக் கருளி" |
எனத் திருநாவுக்கரசர்
தேவாரத்துள் அருளிச் செய்தலாலறிக. இங்ஙனமே
இவ்வரலாறுகளனைத்தும் தேவாரம் முதலிய திருமுறைகளில்
எடுத்தாளப்படுகின்றன என்க. வலந்தரும் மதனை எனப்பிரித்து, மன்மதனை
என்றுரைப்பாருமுளர்; சக்கரப்படை என்பதே ஈண்டுச் சிறந்த பொருளாதல்
உய்த்துணர்க. சலந்தரனுடலங் கீண்டமையும் பிரமன் சிரமரிந்தமையும்
இகலும், மாயோற்குச் சக்கரம் அளித்தமையும் சிலந்தியை மகுடஞ்
சூட்டினமையும் அன்பும் ஆகும். (17)
|