கீரனைக் கரையேற்றிய படலம்111



பொருப்பகழ்ந் தெடுத்தோன் சென்னி புயமிற மிதித்தாய் போற்றி
இருக்கிசைத் தவனே பாட விரங்கிவாள் கொடுத்தாய் போற்றி
தருக்கொடு மிருவர் தேடத் தழற்பிழம் பானாய் போற்றி
செருக்குவிட் டவரே பூசை செய்யநேர் நின்றாய் போற்றி.

     (இ - ள்.) பொருப்பு அகழ்ந்து எடுத்தோன் - திருக்கைலையைப்
பறித்தெடுத்த இராவணனது, சென்னி புயம் இற மிதித்தாய் போற்றி -
தலைகளும் தோள்களும் முறிய மிதித்தருளியவனே வணக்கம்; அவனே
இருக்கு இசைத்துப் பாட - அவ்விராவணனே வேதத்தைக் கூறிப் பாட,
இரங்கி வாள் கொடுத்தாய் போற்றி - கருணை கூர்ந்து அவனுக்கு வாட்படை
யருளியவனே வணக்கம்; தருக்கொடும் இருவர் தேட - செருக்கோடு
திருமாலும் பிரமனும் தேட, தழற் பிழம்பு ஆனாய் போற்றி - அனற்
பிழம்பானவனே வணக்கம்; அவரே - அவ்விருவருமே, செருக்குவிட்டுப்
பூசை செய்ய - அத்தருக்கினை ஒழித்து வழிபட, நேர் நின்றாய் போற்றி -
நேரில் நின்றருளியவனே வணக்கம்.

     இருக்கு என்பது ஈண்டு வேதம் என்னும் பொதுப்பொருளில்
வந்துளது. (20)

பருங்கைமால் யானை யேனம் பாய்புலி யரிமான் மீனம்
இருங்குறள் யாமை கொண்ட விகல்வலி கடந்தாய் போற்றி
குரங்குபாம் பெறும்பு நாரை கோழியா ணலவன் றேரை
கருங்குரீஇ கழுகி னன்புக் கிரங்கிய கருணை போற்றி.

     (இ - ள்.) பருங்கைமால் யானை - பருத்த துதிக்கையையுடைய
யானையும், ஏனம் பாய் புலி அரிமான் மீனம் - பன்றியும் பாய்கின்ற புலியும்
சிங்கமும் மீனமும், இருங்குறள் யாமை கொண்ட இகல்வலி கடந்தாய் போற்றி
- பெரிய குறளும் யாமையுங்கொண்ட மிக்க வலியை அடக்கினவனே
வணக்கம்; குரங்கு பாம்பு எறும்பு நாரை கோழி - குரங்கும் பாம்பும்
எறும்பும் நாரையும் கோழியும், ஆண் அலவன் தேரை கருங்குரீஇ கழுகின் -
ஆண் ஞெண்டும் தவளையும் கரிக்குருவியும் கழுகுமாகிய இவற்றின்,
அன்புக்கு இரங்கிய கருணை போற்றி - அன்புக்கு இரங்கிய கருணையே
வணக்கம்.

     யானையும் புலியும் கொண்ட வன்மையை யொழித்து அவற்றின்
தோலைப் போர்வையாகவும் உடையாகவும் கொண்டருளினமை முன்
கூறப்பட்டது. ஏனம், அரிமான், மீனம், குறள், யாமை என்பன திருமால்
எடுத்த அவதாரங்கள். திருமால், புவியைப் பாயாகச்சுருட்டிப்
பாதலத்திலொளித்த இரணியாக்கனை வெள்ளைப்பன்றி யுருவெடுத்துச்
சென்று கொன்று புவியை முன்போல் நிறுவியும், எல்லாவுலகங்களையும்
தன்னடிப்படுத்து யாவரும் தன் பெயரையே மந்திரமாகக்கூறி வழுத்தும்படி
செய்து இடுக்கண் விளைத்த இரணியனை நரசிங்கவுருக்கொண்டு கொன்றும்,
வேதங்களைக் கவர்ந்து கடலிலொளித்த சோமகன் என்னும் அசுரனை
மீனவுருக்கொண்டு சென்று கொன்று வேதங்களை வெளிப்படுத்தியும்,
எல்லாவுலகங்களையும் தன்னடிப்படுத்துத் தேவர்கள் ஏவல் கேட்ட அரசு