120திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



மையறு மனத்தான் வந்து வழிபடு நியம நோக்கிப்
பையர வாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல்
ஐயனு மணிய னாகி யகமகிழ்ந் தவனுக் கொன்று
செய்யநன் கருணை பூத்துத் திருவுளத் திதனைத் தேர்வான்.

     (இ - ள்.) மை அறும் மனத்தான் - குற்றம் நீங்கிய மனத்தையுடைய
நக்கீரன், வந்து வழிபடும் நியமம் நோக்கி - நாள்தோறும் வந்து வழிபடுங்
கடப்பாட்டினைப் பார்த்து, பை அரவு ஆரம்பூண்ட பரஞ்சுடர் மாடக்கூடல்
ஐயனும் - படத்தையுடைய பாம்பினை ஆரமாகப் பூண்ட பரஞ்சோதியாகிய
நான்மாடக்கூடல் இறைவனும், அணியனாகி அகமகிழ்ந்து - அண்மையனாய்த்
திருவுள்ளம் மகிழ்ந்து, அவனுக்கு ஒன்று செய்ய நன் கருணைபூத்து -
அந்தக்கீரனுக்கு ஒன்று புரியத் திருவருள் கூர்ந்து, திருவுளத்து இதனைத்
தேர்வான் - திருவுள்ளத்தின்கண் இதனைக் கருதுவானாயினன்.

     அணியனாதல் - அவன் உள்ளத்தே விளங்குதல். (5)

இலக்கண மிவனுக் கின்னுந் தெளிகில விதனா லாய்ந்த
நலத்தசொல் வழூஉச்சொ லென்ப தறிகில னவைதீர் கேள்விப்
புலத்தவர் யாரைக் கொண்டு போதித்து மிவனுக் கென்னா
மலைத்தனு வளைத்த முக்கண் மன்னவ னுன்னு மெல்லை.

     (இ - ள்.) இவனுக்கு இன்னும் இலக்கணம் தெளிகில - இவனுக்கு
இன்னும் இலக்கணம் விளங்கவில்லை; இதனால் - இதனாலே, ஆய்ந்த
நலத்தசொல் - ஆராய்ந்த நன்மையையுடைய சொல்லும், வழூஉச் சொல்
என்பது அறிகிலன் - குற்றமுடைய சொல்லும் இது இது என்பதை
அறியாதவனாயினன்; நவைதீர் கேள்விப் புலத்தவர் யாரைக் கொண்டு -
குற்றமற்ற நூற்கேள்வியின் புலமையோர் யாவரால், இவனுக்குப் போதித்தும்
என்னா - இவனுக்குப் போதிப்போ மென்று, மலைத்தனு வளைத்த முக்கண்
மன்னவன் - மலையை வில்லாக வளைத்த மூன்று கண்களையுடைய சுந்தர
பாண்டியன், உன்னும் எல்லை - நினைத்த பொழுது.

     தெளிகில - விளங்கிற்றில, நலத்த, குறிப்புப் பெயரெச்சம். புலத்தவர் -
புலமை யுடையார். போதித்தும், போதிப்போம்; தன்மைப் பன்மை எதிர்கால
முற்று; பன்மை தலைமை பற்றியது. உன்னினான் அங்ஙனம் உன்னும்
பொழுது என விரிக்க. (6)

பங்கயச் செங்கை கூப்பிப் பாலினேர் மொழியாள் சொல்வாள்
அங்கணா வங்கை நெல்லிக் கனியென வனைத்துங் கண்ட
புங்கவா நினது சங்கைக் குத்தரம் புகல வல்லார்
எங்குளா ரேனு மென்னெஞ் சுதிப்பதொன் றிசைப்பே னையா.

     (இ - ள்.) பாலின் நேர்மொழியாள் - பால்போலும்
மொழியினையுடைய உமையம்மையார். பங்கயச் செங்கை கூப்பிச் சொல்வாள்
- தாமரை மலர்போன்ற சிவந்த கரங்களைக் குவித்து வணங்கிக் கூறுவாள்,