கீரனுக்கு இலக்கண முபதேசித்த படலம்121



அங்கணா - அங்கணனே, அங்கை நெல்லிக்கனி என அனைத்தும் கண்ட
புங்கவா - உள்ளங்கை நெல்லிக்கனி போல யாவையும் உணர்ந்த புங்கவனே,
நினது சங்கைக்கு உத்தரம் புகலவல்லார் எங்கு உளார் - உனது கேள்விக்கு
விடைகூற வல்லவர் எங்கே உள்ளார் (ஒருவருமில்லை), ஏனும் - எனினும்,
என் நெஞ்சு உதிப்பது ஒன்று - எனது உள்ளத்திலே தோன்றுவதொன்றை,
இசைப்பேன் ஐயா - கூறுவேன் ஐயனே.

     புங்கவன் - உயர்ந்தோன்; தேவன். ஏனும் - அங்ஙனமாயினும். (7)

பண்டொரு வைகல்* வெள்ளிப் பனிவரை யிடத்துன் பாங்கர்ப்
புண்டவழ் குலிசக் கோமான் பூமகன் மாயப் புத்தேள்
அண்டருஞ் சனக னாதி யருந்தவர் பிறரு மீண்டிக்
கொண்டன ரிருந்தா ரிந்தக் குவலயம் பொறாது மாதோ.

     (இ - ள்.) பண்டு ஒரு வைகல் - முன்னொரு நாள், பனி வெள்ளி
வரை இடத்து உன் பாங்கர் - வெளிய இமய மலையின்கண் உன்பக்கலில்,
புண்தவழ் குலிசக் கோமான் - புலால் விளங்கும் வச்சிரப்படையையுடைய
இந்திரனும், பூமகன் மாயப் புத்தேள் அண்டரும் - பிரமனும் திருமாலும்
பிறதேவர்களும், சனகன் ஆதிஅருந்தவர் பிறரும் - சனகன் முதலிய அரிய
முனிவரும் பிறரும், ஈண்டிக்கொண்டனர் இருந்தார் - நெருங்கி இருந்தார்;
இந்தக் குவலயம் பொறாது - அதனால் இந்த ஞாலம் பொறுக்கலாற்றாது.

     பண்டொரு வைகல் என்றது திருக்கல்யாண காலத்தை. மாயப்புத்தேள்
முதலிய அண்டரும் பிறரும் என விரிக்க. கொண்டனர், முற்றெச்சம். மாது,
ஓ அசை. (8)

தாழ்ந்தது வடகீ ழெல்லை யுயர்ந்தது தென்மேற் கெல்லை
சூழ்ந்தது கண்டு வானோர் தொழுதுனைப் பரவி யைய
ஊழ்ந்திடு மரவம் பூண்டோ யொருவனின் னொப்பா னெங்கே
வாழ்ந்திட விடுத்தா லிந்த வையநேர் நிற்கு மென்றார்.

     (இ - ள்.) வடகீழ் எல்லை தாழ்ந்தது - வடகிழக் கெல்லை தாழ்ந்தது;
தென்மேற்கு எல்லை உயர்ந்தது - தென்மேற் கெல்லை உயர்ந்தது; அது
கண்டு - அதனைப் பார்த்து, வானோர் உனைச் சூழ்ந்து - தேவர்கள்
உன்னைச் சூழ்ந்து கொண்டு, தொழுது பரவி - வணங்கித் துதித்து, ஐய -
ஐயனே, ஊழ்ந்திடும் அரவம் பூண்டோய் - ஊருகின்ற பாம்பினை
அணிந்தவனே, நின் ஒப்பான் ஒருவன் அங்கே வாழ்ந்திட விடுத்தால் -
நின்னையொப்பா னொருவனை அத் தென்மேற் கெல்லையில் வாழும்படி
விடுப்பின், இந்த வையம் நேர்நிற்கும் என்றார் - இந்த நிலவுலகம் சமமாக
நிற்கும் எனக் கூறினர்.

     சூழ்ந்து - ஆலோசித்து என்றுமாம். ஊழ்ந்திடல் - ஊர்தல் என்னும்
பொருட்டு. நின்னை உள்ளத்தே கொண்டிருத்தலால் நின்னொப்பான்
என்க. (9)


     (பா - ம்) * பண்டொரு போது.