கீரனுக்கு இலக்கண முபதேசித்த படலம்125



பெருகு மன்புளந் துளும்பமெய் யானந்தம் பெருக
அருகி ருந்தன னாவயிற் கீரனு மம்பொன்
முருக விழ்ந்ததா மரைபடிந் திறைவனை முன்போல்
உருகு மன்பினா லிறைஞ்சுவா னொல்லைவந் தடைந்தான்.

     (இ - ள்.) பெருகும் அன்பு உளம் துளும்ப - சுரந்து பெருகும்
அன்பானது உள்ளம் நிறைந்து ததும்புவதால், மெய் ஆனந்தம் பெருக -
சிவானந்தம் பெருக, அருகு இருந்தனன் - அருகில் இருந்தனன்; கீரனும் -
நக்கீரனும், முருகு அவிழ்ந்த தாமரைபடிந்து - மணம்விரிந்த அழகிய
பொற்றாமரையிற் படிந்து, முன்போல் - முன்போலவே, உருகும் அன்பினால்
இறைவனை இறைஞ்சுவான் - உருகுகின்ற அன்பினால் இறைவனை
வணங்குதற்பொருட்டு, ஆவயின் ஒல்லைவந்து அடைந்தான் - அங்கு
விரைந்து வந்து சேர்ந்தனன்.

     மெய் - ஆக்கை என்றுமாம். அன்பினால் உள்ள முருகுதலும்
ஆனந்தம் விளைதலும்,

"அன்பினா லடியே னாவியோ டாக்கை
யானந்த மாய்க்கசிந் துருக"

என்னும் திருவாசகத்தால் அறியப்படும். ஆவயின், சுட்டுநீண்டது.
இறைஞ்சுவான் வினையெச்சம். (17)

இருந்த மாதவச் செல்வனை யெதிர்வர நோக்கி
அருந்த வாவிவற் கியற்றமி ழமைந்தில வெம்பாற்
றெரிந்த நீயதை யரிறபத் தெருட்டெனப் பிணியும்
மருந்து மாகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான்.

     (இ - ள்.) இருந்த மாதவச் செல்வனை - அருகில் இருந்த பெரிய
தவமாகிய செல்வத்தையுடைய அகத்திய முனிவனை, எதிர்வர நோக்கி -
திருமுன் வருமாறு கடைக்கண்சாத்தி, அருந்தவா - அரிய தவச் செல்வ,
இவற்கு இயல்தமிழ் அமைந்தில - இந்நக்கீரனுக்குத் தமிழிலக்கணம்
நிரம்பிற்றில; எம்பால் தெரிந்த நீ - எம்மிடத்துக் கேட்டுத் தெரிந்த நீ,
அதை அரில்தபத்தெருட்டு என - அவ்விலக்கணத்தைக் குற்றம்நீங்க
இவற்கு விளக்குக என்று, பிணியும் மருந்துமாகிய பெருந்தகை செய்ய
வாய்மலர்ந்தான் - பிணியும் மருந்துமாகிய சோமசுந்தரக்கடவுள் செவ்விய
திருவாய்மலர்ந்தருளினன்.

     தப - நீங்க; தபு, பகுதி;

"உப்பகார மொன்றென மொழிப
இருவயினிலையும் பொருட்டாகும்மே"

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் தபு என்பது தன்வினைக்கும்
பிறவினைக்கும் உரித்தாதல் பெறப்படும்; ஈண்டுத் தன்வினைக்கண் வந்தது.
தெருட்டு, தெருள் என்பதன் பிறவினை. இறைவன் தன் ஆணைவழி நில்லாத
உயிர்கட்குத் துன்பமும், நிற்கும் உயிர்கட்கு இன்பமும் அருளுதலின்
பிணியும் அதற்கு மருந்துமாகிய பெருந்தகை என்றார். இதனைக்
கோபப்பிரசாதத்தாலும் அறிக. (18)