128திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அம்முதனூலின் உட்கிடைப்பொருளை ஐயமற விளக்கி, தெரித்து
உரைத்தனன் - தெருட்டிக் கூறினன்; உரைத்திடு திறம் கண்டு - அவன்
கூறிய வன்மையைப் பார்த்து, நூலின் அருத்தமே வடிவு ஆகிய - அந்நூலின்
பொருளே திருவுருவமாகிய, ஆதி ஆசிரியன் - முதற் குரவனாகிய
சோமசுந்தரக் கடவுள்.

     காண்டிகையாவது கருத்து, பதப்பொருள், எடுத்துக்காட்டு, வினா, விடை
என்னும் ஐந்துங் கொண்டது. விருத்தியாவது பாடம், கருத்து, சொல்வகை,
சொற்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு,
அதிகாரம், துணிவு, பயன், ஆசிரியவசனம் என்னும் பதினான்கனையும்
கொண்டது. (21)

தருக்கு மின்பமுங் கருணையுந் தழைய*மா தவனைத்
திருக்க ரங்களான் மகிழ்ச்சியுட் டிளைத்திடத் தடவிப்+
பெருக்க வேண்டிய பேறெலாம் பீடுற நல்கி
இருக்கை யிற்செல விடுத்தன னாலவா யிறைவன்.

     (இ - ள்.) தருக்கும் இன்பமும் கருணையும் தழைய - களிப்பும்
இன்பமும் அருளும் பெருக, மாதவனை - தவப்பெரியானாகிய அவ்வகத்திய
முனிவனை, மகிழ்ச்சியுள் திளைத்திட - (அவன்) மகிழ்ச்சிக் கடலுள்
திளைக்க, திருக்கரங்களால் தடவி - தனது திருக்கைகளாலே தடவி,
வேண்டிய பேறு எலாம் - அவன் பெறவேண்டிய பயன் அனைத்தையும்,
பெருக்க - நிரம்ப, பீடுஉற நல்கி - சிறக்கக் கொடுத்தருளி, இருக்கையில்
செல விடுத்தனன் - அவன் இருக்கையிற் செல்ல விடுத்தருளினான்;

     ஆலவாய் இறைவன் - திருவாலவாயின்கண் எழுந்தருளிய
இறைவன். (22)

பொன்ன னாளொடுங் குறுமுனி விடைகொடு போன
பின்னை யாருயிர்க் கிழத்திதன் பிரானைநேர் நோக்கி
என்னை நீயிவற் குணர்த்திடா தித்தவப் பொதியின்
மன்ன னாலுணர்த் தியதென மதுரைநா யகனும்.

     (இ - ள்.) பொன் அனாளொடும் குறுமுனி விடைகொடு போன
பின்னை - பொன்னை யொத்த உலோபா முத்திரை யோடுங் குறுமுனி
விடைபெற்றுப் போன பின்னர், ஆர் உயிர்க்கிழத்தி - அரிய உயிர்போன்ற
பிராட்டியார், தன் பிரானை நேர்நோக்கி - தன் தலைவனாகிய சோமசுந்தரக்
கடவுளை எதிரே பார்த்து, இவற்கு நீ உணர்த்திடாது - இந் நக்கீரனுக்கு நீ
இலக்கணம் அறிவித்தருளாது, இத்தவப் பொதியின் மன்னனால் உணர்த்தியது
என்னை என - இத்தவமுடைய பொதியின் மலைத்தலைவனாகிய
அகத்தியனால் உணர்த்திய காரணம் என்னென்று வினவ, மதுரை நாயகனும்
- மதுரைப் பெருமானும்.

     கிழத்தி உரிமை யுடையாள்; கிழமை பகுதி. (23)


     (பா - ம்.) * தழைப்ப. +திளைத்திடத் தழுவி.