தன்னை நித்தலும் வழிபடுந் தகுதியோர் சாலப்
பொன்ன ளிப்பவர் தொடுத்தமற் சரமிலாப் புனிதர்
சொன்ன சொற்கட வாதவர் துகடவிர் நெஞ்சத்
தின்ன வர்க்குநூல் கொளுத்துவ தறனென விசைப்ப. |
(இ
- ள்.) தன்னை நித்தலும் வழிபடும் தகுதியோர் - தன்னை நாள்
தோறும் வழிபடும் தன்மை யுடையோரும், சாலப் பொன் அளிப்பவர் -
நிறையப் பொருள் கொடுப்போரும், தொடுத்த மற்சரம் இலாப்புனிதர் -
அழுக்காறு அடைதலில்லாத மனத்தூய்மை உடையவரும், சொன்ன சொல்
கடவாதவர் - சொன்ன சொல்லைக் கடவாதவரும் ஆகிய, துகள்தவிர்
நெஞ்சத்து இன்னவர்க்கு - குற்றம் நீங்கிய உள்ளமுடைய இவர் போல்
வார்க்கு, நூல் கொளுத்துவது அறன்என இசைப்ப - நூல் போதிப்பது
அறமென்று கூறுவர் அறிந்தோர்.
மற்சரம்
- மாற்சரியம், அழுக்காறு. (24)
இவனெ டுத்தமற் சரத்தினால் யாமுணர்த் தாதத்
தவனை விட்டுணர்த் தினமெனச் சாற்றினான் கேட்டுக்
கவலை விட்டக மகிழ்ச்சிகொண் டிருந்தனள் கதிர்கால்
நவம ணிக்கலம் பூத்ததோர் கொடிபுரை நங்கை. |
(இ
- ள்.) இவன் எடுத்த மற்சரத்தினால் - இவன் கொண்ட
அழுக்காற்றினால், யாம் உணர்த்தாது - யாம் அறிவுறுத்தாமல், அத்
தவனை விட்டு உணர்த்தினம் எனச் சாற்றினான் - அம்முனிவனை விட்டு
அறிவித்தோம் என்று கூறியருளினான்; கேட்டு - அதனைக் கேட்டு, கவலை
விட்டு - ஐயமொழிந்து, கதிர்கால் நவமணிக் கலம் பூத்தது ஓர் கொடிபுரை
நங்கை - ஒளி வீசும் நவமணிகள் பதித்த அணிகளைப் பூத்ததாகிய ஒரு
கொடிபோன்ற பிராட்டி, அகம் மகிழ்ச்சி கொண்டு இருந்தனள் - மனமகிழ்ச்சி
கொண்டு இருந்தனள்.
கவலை
- முற்றுமுணர்ந்த பெருமான் தான் உணர்த்தாது ஓர்
முனிவனால் உணர்த்தியது என்னை யென்னும் ஐயம். (25)
கற்ற கீரனும் பின்புதான் முன்செய்த கவிகண்
முற்று மாய்ந்துசொல் வழுக்களும் வழாநிலை முடிபும்
உற்று நோக்கினா னறிவின்றி முழுதொருங் குணர்ந்தோன்
சொற்ற பாடலிற் பொருள்வழுச் சொல்லினே னென்னா. |
(இ
- ள்.) கற்ற கீரனும் - அகத்தியர்பால் இலக்கணங் கற்ற நக்கீரனும்,
பின்பு - பின்னர், தான் முன் செய்த கவிகள் முற்றும் ஆய்ந்து - தான்
முன்னே செய்த கவிகள் அனைத்தையும் ஆராய்ந்து, சொல் வழுக்களும்
வழாநிலை முடிபும் உற்று நோக்கினான் - வழூஉச்சொல் முடிபும்
வழாநிலைமுடிபும் ஆகிய இவற்றைச் சிந்தித்துப் பார்த்து, முழுது ஒருங்கு
உணர்ந்தோன் சொற்ற பாடலில் - முற்றும் ஒருசேர உணர்ந்த இறைவன்
கூறியருளிய பாசுரத்தில், அறிவு இன்றி - அறிவில்லாமையினால்,
பொருள்வழுச் சொல்லினேன் என்னா - பொருட் குற்றஞ் சொல்லினேன்
என்று.
|