"தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்" |
என்னும் வாயுறை வாழ்த்தானும்
அறிக. விழுமம் - துன்பம்; கவலை. (28)
மகவை யீன்றதாய் கைத்திடு மருந்துவாய் மடுத்துப்
பகைப டும்பிணி யகற்றிடும் பான்மைபோ லென்னை
இகலி ழைத்தறி வுறுத்தினாற்* கேழையேன் செய்யத்
தகுவ தியாதென வரம்பிலா மகிழ்ச்சியுட் டாழ்ந்தான். |
(இ
- ள்.) மகவை ஈன்றதாய் - பிள்ளையைப் பெற்ற தாய், கைத்திடும்
மருந்துவாய் மடுத்து - கசக்கும் மருந்தினை அதன் வாயில் ஊட்டி,
பகைபடும் பிணி அகற்றிடும் பான்மைபோல் - பகைத்தலைப் பொருந்திய
பிணியை நீக்குந் தன்மை போல, என்னை இகல் இழைத்து - என்மேற்
சினங்கொண்டு, அறிவுறுத்தினாற்கு - அறிவுறுத்திய அவ்விறைவனுக்கு,
ஏழையேன் செய்யத்தகுவது யாது என - அறிவிலியாகிய என்னாற்
செய்யத்தக்க கைம்மாறு யாதென்று, வரம்பு இலா மகிழ்ச்சியுள் தாழ்ந்தான் -
எல்லையில்லாத மகிழ்ச்சிக் கடலுள் அழுந்தினான்.
மகவு
மருந்தினை உண்ணாதாகவும் தாய் அதனை வலிதின் ஊட்டிப்
பிணிய கற்றுதல் போல என்க. பகைபடும் - உடம்பிற்குப் பகையாகப்
பொருந்தும். தன் பிழை கருதித் துன்பத்துள் ஆழ்ந்தவன் பின்பு இறைவன்
புரிந்த அருள் கருதி இன்பத்துள் ஆழ்ந்தான்.
"கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை" |
என்றார்.
மாணிக்கவாசகப் பெருமானும். (29)
மாத வன்றனக் காலவாய் மன்னவ னருளாற்
போத கஞ்செய்த நூலினைப் புலவரே னோர்க்கும்
ஆத ரஞ்செயக் கொளுத்தியிட் டிருந்தன னமலன்
பாத பங்கய மூழ்கிய பத்திமைக் கீரன். |
(இ
- ள்.) அமலன் பாதபங்கயம் மூழ்கிய பத்திமைக்கீரன் -
நின்மலனாகிய சோமசுந்தரக்கடவுளின் திருவடித் தாமரையில் அழுந்திய
அன்பையுடைய நக்கீரன், மாதவன் தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால்
- குறுமுனிவனானவன் தனக்கு அவ்விறைவனருளால், போதகம் செய்த
நூலினை - போதித்த இலக்கணநூலை, புலவர் ஏனோர்க்கும் - ஏனைய
புலவர்களுக்கும், ஆதரம் செயக் கொளுத்தியிட்டு இருந்தனன் - அன்புமிக
அறிவுறுத்தியிருந்தான்.
ஆலவாய்
மன்னவன் - மதுரையிற் சுந்தர பாண்டியனாக அரசுபுரிந்த
இறைவன்; சுட்டாகக் கொள்க. (30)
ஆகச்
செய்யுள் - 2596
(பா
- ம்.) * உறுத்தினாய்க்கு.
|