சங்கத்தார் கலகந் தீர்த்த படலம் 133



தொழுதன ரடிகள் யாங்க டொடுத்தவிப் பாட றம்முள்
விழுமிதுந் தீதுந் தூக்கி வேறுபா டளந்து காட்டிப்
பழுதறுத் தையந் தீரப் பணிக்கெனப் பணிந்தார் கேட்டு
முழுதொருங் குணர்ந்த வேத முதல்வனா முக்கண் மூர்த்தி.

     (இ - ள்.) தொழுதனர் - வணங்கி, அடிகள் - இறைவ, யாங்கள்
தொடுத்த இப்பாடல் தம்முள் - யாங்கள் பாடிய இப்பாடல்களுள், விழுமிதும்
தீதும் தூக்கி - வழுவில்லாததனையும் வழுவுள்ளதனையும் சீர்தூக்கி, வேறு
பாடு அளந்து காட்டி - அவற்றின் பெருமை சிறுமைகளைத் தெரித்துக்காட்டி,
பழுது அறுத்து ஐயம் தீரப் பணிக்க எனப் பணிந்தார் - எம்முள் எழுந்த
இறுமாப்பினைப்போக்கி எமது ஐயுறவு நீங்குமாறு பணித்தருளக் கடவை
என்று வேண்டி (மீண்டும்) வணங்கினர்; முழுது ஒருங்கு உணர்ந்த வேதம்
முதல்வனாம் முக்கண் மூர்த்தி கேட்டு - முற்றும் ஒருசேர உணர்ந்தருளிய
மறை முதல்வனாகிய அம் முக்கட்பெருமான் (அதனைக்) கேட்டருளி.

     தொழுதனர், முற்றெச்சம். பழுது - குற்றம், செருக்கு. பணிக்கென
அகரந்தொகுத்தல். (3)

இருவருந் துருவ நீண்ட வெரியழற் றூணிற் றோன்றும்
உருவென வறிவா னந்த வுண்மையா யுலகுக் கெல்லாங்
கருவென முளைத்த மூல விலிங்கத்து ணின்றுங் காண்டற்
கரியதோர் புலவ னாகித் தோன்றியன் றருளிச் செய்வான்.

     (இ - ள்.) இருவரும் துருவ - திருமாலும் பிரமனும் தேட, நீண்ட எரி
அழல் தூணில் - எட்டாது நீண்ட தீப்பிழம்பினின்றும், தோன்றும் உரு என
- தோன்றியருளிய திருவுருவம்போல, அறிவு ஆனந்த உண்மையாய் -
சச்சிதானந்த வடிவமாய், உலகுக்கு எல்லாம் கரு என முளைத்த -
உலகத்திலுள்ள இலிங்கங்களுக்கெல்லாம் காரணமாய் முளைத்த, மூல
இலிங்கத்துள் நின்றும் காண்டற்கு அரியது ஓர் புலவனாகி -
மூலவிலிங்கத்துள் நின்றும் காணுதற்கரிய ஒரு புலவனாகத் திருவுருக்
கொண்டு, தோன்றி - வெளிப்பட்டு, ஒன்று அருளிச்செய்வான் - ஒரு செய்தி
கூறியருளுவான்.

     அறிவானந்த உண்மையாய் என்பதனை உண்மை யறிவானந்தமாய்
என மாறுக; உண்மை - சத்து. இது சச்சிதானந்த வடிவமான தென்பதும்,
மேரு முதலிய இடங்களிலுள்ள இலிங்கமெல்லாம் தோன்றுதற்கு முன்
தோன்றினமையாலும், அவ்விலிங்கமெல்லாம் இதினின்றும் கிளைத்தமையாலும்
இது மூலலிங்கம் எனப்படும் மூர்த்தி விசேடப் படலத்திற் கூறப்பட்டமை
காண்க. இனி, உலகுக்கெல்லாம் என்பதற்கு உலகத்தின் தோற்றரவுக்
கெல்லாம் என்றுரைத்தலுமாம்; இதனை,