கீரன்றமிழ்
முதலியவற்றில் ஆறாவது செய்யுட்கிழமை. அடுக்கு மிகுதிப்
பொருள் குறித்தது. (11)
நுைழந்தான்பொரு
டொறுஞ்சொற்றொறு நுண்டீஞ்சுவையுண்டே
தழைந்தானுடல் புலனைந்தினுந் தனித்தான்சிரம் பனித்தான்
குழைந்தான்விழி வழிவேலையுட் குளித்தான்றனை யளித்தான்
விழைந்தான்புரி தவப்பேற்றினை விளைத்தான் களிதிளைத்தான். |
(இ
- ள்.) தனை அளித்தான் விழைந்தான் புரிதவப் பேற்றினை
விளைத்தான் - தன்னைப் பெற்ற தந்தை விரும்பிச் செய்த தவத்தின்
பயனைப் புலப்படுத்திய அவ்வணிக மைந்தன், நுண் பொருள்தொறும்
சொல்தொறும் நுழைந்தான் - நுண்ணிய பொருள்தோறும் சொல்தோறும்
நுழைந்து, தீஞ்சுவை உண்டு உடல் தழைத்தான் - அவற்றின் இனிய
சுவையினை அருந்தி உடல் பூரித்து, புலன் ஐந்தினும் தனித்தான் -
ஐம்புலன்களினின்றுந் தனித்து அச்சுவை மயமாயினன்; சிரம் பனித்தான் -
முடி துளக்கினான்; குழைந்தான் விழிவழி வேலையுள் குளித்தான்
களிதிளைத்தான் - மனங்குழைந்து விழிகளினின்றும் வழிகின்ற ஆனந்தக்
கண்ணீராகிய கடலுட் குளித்துக் களிகூர்ந்தனன்.
பொருட்சுவை
- நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,
பெருமிதம், வெகுளி, உவகை, சமனிலை என்னும் ஒன்பதுமாம். சொற்சுவை -
குணம். அலங்காரம் என்பன. புலனைந்தினும் தனித்தலாவது ஐம்புல வுணர்வு
மின்றிச் சுவை மயமாதல். அளித்தான், விளைத்தான் என்பன
வினையாலணையும் பெயர்கள். நுழைந்தான், தழைந்தான், குழைந்தான்,
விழைந்தான் என்பன முற்றெச்சங்கள். (12)
பல்காசொடு
கடலிற்படு பவளஞ்சுடர் தரளம்
எல்லாநிறுத் தளப்பானென வியல்வாணிகக் குமரன்
சொல்லாழமும் பொருளாழமுந் துலைநாவெனத் தூக்க
நல்லாறறி புலவோர்களு நட்டாரிகல் விட்டார். |
(இ
- ள்.) பல்காசொடு கடலில் படுபவளம் சுடர்தரளம் எல்லாம் -
பல மணிகளும் கடலிற்றோன்றும் பவளமும் ஒளிவிடும் முத்துமாகிய
அனைத்தையும், நிறுத்து அளப்பான் என - நிறுத்து அறுதி யிடுவான்போல,
இயல்வாணிகக் குமரன் - அழகிய வணிகமைந்தன், சொல் ஆழமும் பொருள்
ஆழமும் நா துலை எனத் தூக்க - செல்லாழத்தையும் பொருள் ஆழத்தையும்
நாவினையே துலையாகக் கொண்டு நிறுத்துக்காட்ட, நல் அறிபுலவோர்களும்
இகல் விட்டார் நட்டார் - நன்னெறியை அறிந்த புலவர்கள் யாவரும்
பகையை விடுத்து நண்பராயினர்.
சுடர்தரளம்,
வினைத்தொகை. நா என்றது உபசாரம்; துலையினது
நாவென்ன என்றுமாம், விட்டார், முற்றெச்சம். (13)
|