14திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



(அந்நாட்டிலுள்ளார்) மங்கலமான நன்மைகளைப் பெறுமாறு, வாழ்வுறும்
நாள் - வாழும் நாளில்.

     நயம்பெறு என்பது பாடமாயின் அம்மூவரும் நன்மைபொருந்திய
வாழ்வினைப் பொருந்துநாளில் என்க. கல்வி செல்வங்களானும்
பிறநலன்களானும் ஞாலம் பொலிவெய்திய தென்பது கருத்து. (2)

வேழ மறப்படை சூழவெதிர்த்தவர் வீறு கெடுத்தடியிற்
றாழ வடர்த்திகல் வாகை தொடுத்தலர் தார்புனை விக்கிரமச்
சோழன் மதிக்குல நாயக னைப்பொரு சூள்கரு தித்தொலையா
ஆழ்கட லுக்கிணை யாமனி கத்தொடு மாடம ருக்கெழுவான்.

     (இ - ள்.) மறவேழப்படை சூழ எதிர்த்தவர் - கொலைத்தொழிலை
யுடைய யானைப்படைசூழ எதிர்த்த பகைவர், அடியில் தாழ - தனது
அடியில் வீழ்ந்து வணங்குமாறு, வீறுகெடுத்து அடர்த்து - அவர் தருக்கை
யொழித்து வென்று, இகல்வாகை தொடுத்து அலர்தார் புனை விக்கிரமச்
சோழன் - வெற்றிக்குரிய வாகை மலராற் றொடுத்து விளங்கிய
மாலையையணிந்த விக்கிரமசோழன், மதிக்குலநாயகனைப் பொரு சூள் கருதி
- சந்திரமரபிற் றோன்றிய வங்கிய சேகரபாண்டியனைப் பொருது வெல்லும்
வஞ்சினத்தை எண்ணி, தொலையா ஆழ்கடலுக்கு இணை ஆம்
அனிகத்தொடும் - அழியாத ஆழ்ந்த கடலுக்கு ஒப்பாகிய படையோடும்,
ஆடு அமருக்கு எழுவான் - அடுதலைச்செய்யும் போருக்கு எழுவானாயினன்.

     பொரு சூள் கருதி என்பதற்குச் சூளுடன் பொருது வெல்லுதல் கருதி
என்பது கருத்தாகக்கொள்க. (3)

கயபதி காய்சின நரபதி பாய்துர கதபதி யேமுதலா
வயமிகு தோள்வட திசையின ராதிபர் வலிகெழு சேனையினோ
டியமிடி யேறிமி ழிசையென வாய்விட விரதம தேறிநடா அய்ப்
பயன்மலி காவிரி நதியரு கேயுறை பதிகொடு மேயினனால்.

     (இ - ள்.) கயபதி - கயபதியும், காய்சின நரபதி - வருத்துஞ்சினத்தை
யுடைய நரபதியும், பாய் துரகதபதி முதலா - பாய்ந்து செல்லுந் துரகபதியும்
முதலாக, வயம்மிகுதோள் வடதிசையின் நராதிபர் - வெற்றிமிக்க
தோள்களையுடைய வடதிசை மன்னர்களின், வலிகெழுசேனையினோடு -
வலிமைமிக்க படையோடு, இயம் இடியேறு இமிழ் இசையென வாய்விட -
பல்லியங்கள் இடியேறு ஒலிக்கும் ஒலிபோல ஒலிக்க, இரதம் ஏறி நடாஅய் -
தேரில் ஏறி அதனைச்செலுத்தி, பயன் மலி காவிரிநதி அருகே - பயன்மிக்க
காவிரியாற்றின் அருகேயுள்ள, உறைபதி கொடு - தான் உறையும்
பதியினின்று, மேயினன் - புறப்பட்டு வந்தனன்.

     கயபதி முதலிய பெயர்கள் யானைகளையுடைய தலைவன் என்பது
முதலிய பொருளுடையன. நராதிபர், வடமொழித் தீர்க்கசந்தி. இரதமது,
அது : பகுதிப் பொருள்விகுதி. நடாஅய், சொல்லிசை யளபெடை. பதிகொடு
- பதியினின்று என்னும் பொருட்டு. (4)

சிலைத்தெழு செம்பியன் வெம்படை மள்ளர் செயிர்த்து மதிக்கடவுட்
குலத்தவ னாட்டினி ருந்*தெழி லானிரை கொண்டு குறும்புசெய்து
மலர்த்தட மேரி யுடைத்து நகர்க்கு வரும்பல பண்டமுமா
றலைத்து முடுக்கி நடுக்கம் விளைத்து மமர்க்கடி யிட்டனரால்.

     (இ - ள்.) சிலைத்து எழுசெம்பியன் வெம்படைமள்ளர் - ஆரவாரித்து
எழுந்த சோழனுடைய கொடிய படைவீரர், செயிர்த்து - சினந்து, மதிக்கடவுள்
குலத்தவன் நாட்டின் இருந்து - திங்கட்புத்தேன் மரபினனாகிய பாண்டியன்
நாட்டிற் றங்கி, எழில் ஆன் நிரைகொண்டு குறும்பு செய்தும் - அழகிய
பசுநிரைகளைக் கவர்ந்து தீமை புரிந்தும், மலர்த்தடம் ஏரி உடைத்தும் -
மலர் நிறைந்த குளங்களையும் ஏரிகளையும் உடைத்தும், நகர்க்கு வரும் பல
பண்டமும் ஆறலைத்து முடுக்கி நடுக்கம் விளைத்தும் - நகருக்குள்
வருகின்ற பலபொருள்களையும் வழிப்பறித்து அவை கொண்டுவருவோரைத்
துரத்தி அவருக்குத் துன்பம் விளைத்தும், அமர்க்கு அடியிட்டனர் -
இங்ஙனமாகப் போர்புரிதற்கு அடி கோலினர்.

     ஆனிரைகொண்டும் என உம்மைவிரித்து, குறும்புசெய்து உடைத்து
எனக் கூட்டியுரைத்தலுமாம். அடியிடுதல் - தொடக்கஞ்செய்து
கொள்ளுதல். (5)

மாற னறிந்தினி யென்செய்து நேரியன் வன்படையோ வளவின்
றேறி யெதிர்ந்தம ராட லெனக்கரி? திக்குறை யைப்பிறையோ
டாறணி பூரண சுந்தர னெந்தை யடித்தல முன் குறுகாக்
கூறியிரந்து வரம்பெறு கென்றிறை கோயி லடைந்தன னால்.

     (இ - ள்.) மாறன் அறிந்து - (அதனை) பாண்டியன் அறிந்து, இனி
என் செய்து - இனி யான் யாது செய்வேன்; நேரியன் வன்படையோ அளவு
இன்று - சோழனது வலிய படையோ அளவில்லாதது; ஏறி எதிர்ந்து அமர்
ஆடல் எனக்கு அரிது - (ஆதலால்) மேற் சென்று எதிர்த்துப் போர் புரிதல்
எனக்கு முடியாத தொன்று; இக்குறையை - இந்தக் குறைபாட்டை,
பிறையோடு ஆறுஅணிபூரண சுந்தரன் எந்தை - சந்திரனோடு கங்கையையு
மணிந்த எங்கும் நிறைந்த சோமசுந்தரக் கடவுளாகிய எம் தந்தையுனது,
அடித்தலம் முன் குறுகா - திருவடிகளின் முன்பெய்தி, கூறி - சொல்லி,
இரந்து வரம் பெறுகு - குறை யிரந்து வரம் பெறுவேன்; என்று இறை
கோயில் அடைந்தனன் - என்று கருதி அவ்விறைவன் திருக்கோயிலை
அடைந்தான்.

     செய்து, பெறுகு என்பன தன்மை யொருமை எதிர்கால முற்றுக்கள்;
செய்தும் எனப்பிரித்துப் பன்மை யொருமை விரவி வந்தன எனலுமாம். (6)


     (பா - ம்.) * நாட்டுமிருந்து. +ஆடினெனக்கரிது.