142திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



இயற்றிய அந்நூலுடன், மூரித்தீந்தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு -
மிகவும் இனிய மது வழிந்தொழுகும் வேப்ப மலர்மாலையை யணிந்த
அப்பாண்டியனைக் கண்டு, தொடுத்த உரைப்பனுவல் வாசித்தான் -
தானியற்றிய உரை யமைந்த செய்யுளைப் படித்தனன்.

     முழவுத் தோளான் கேள்வியினான் எனக்கேட்டு என இயைக்க.
கழிந்த பெரு, ஒரு பொருண் மேல் வந்தன. காண்டும், தன்மைப் பன்மை
யெதிர்கால முற்று. மூரி - பெருமை. தொடுத்த என்பதன் ஈற்றகரம்
தொக்கது. ஆல் -அசை. (6)

வழுக்காத சொற்சுவையும் பொருட்சுவையும்
     பகிர்ந்தருந்த வல்லோ னுள்ளத்
தழுக்காற்றாற் சிரந்துளக்கா னகமகிழ்ச்சி
     சிறிதுமுகத் தலர்ந்து காட்டான்
எழுக்காயுந் திணிதோளா னொன்றுமுரை
     யான்வாளா விருந்தா னாய்ந்த
குழுக்காத னண்புடையான் றனைமானம்
     புறந்தள்ளக் கோயில் புக்கான்.

     (இ - ள்.) வழுக்காத சொல் சுவையும் பொருள் சுவையும் பகிர்ந்து
அருந்த வல்லோன் - குற்றமில்லாத சொல்லின் சுவையையும் பொருளின்
சுவையையும் பாகுபடுத்தி நுகரவல்ல அப்பாண்டியன், உள்ளத்து
அழுக்காற்றால் - மனத்தின்கண் உள்ள பொறாமையால், சிரம் துளக்கான் -
முடியை அசைக்காமலும், அகமகிழ்ச்சி சிறிதும் முகத்து அலர்ந்து காட்டான்
- உள்ள மகிழ்ச்சியை முகத்தின்கண் சிறிதும் மலர்ந்து காட்டாமலும்,
எழுக்காயும் திணிதோளான் - தூணைவென்ற திண்ணிய தோளையுடைய
அப்பாண்டியன், ஒன்றும் உரையான் வாளா இருந்தான் - ஒன்றுங்கூறாது
சும்மா இருந்தனன்; ஆய்ந்த குழுகாதல் நண்பு உடையான் - நூல்களை
ஆராய்ந்த புலவர் கூட்டத்தால் விரும்பப்பட்ட நட்பினையுடைய அப்புலவன்.
தனைமானம் புறம்தள்ளக் கோயில் புக்கான் - தன்னை மானமானது
வெளியே தள்ள (ச் சென்று) திருக்கோயிலைச் சார்ந்தான்.

     வல்லோனாகிய தோளான் என இயைக்க; தோளான் வல்லோன்
எனினும் என விரித்துரைத்தலுமாம். முகமலர்ச்சியால் அகமகிழ்ச்சியைப்
புலப்படுத்தாதென்க. (7)

சந்நிதியில் வீழ்ந்தெழுந்து தமிழறியும் பெருமானே தன்னைச்
                                       சார்ந்தோர்
நன்னிதியே திருவால வாயுடைய நாயகனே நகுதார் வேம்பன்
பொன்னிதிபோ லளவிறந்த கல்வியுமிக் குளனென்று புகலக்
                                       கேட்டுச்
சொன்னிறையுங் கவிதொடுத்தே னவமதித்தான் சிறிதுமுடி
                                       துளக்கானாகி.

     (இ - ள்.) சந்நிதியில் வீழ்ந்து எழுந்து - திருமுன் விழுந்து வணங்கி
எழுந்து, தமிழ் அறியும் பெருமானே - தமிழை அறியும் பெருமானே,
தன்னைச் சார்ந்தோர் நல்நிதியே - சார்ந்தவர்க்கு நல்ல நிதிபோல்வாய்,