சுந்தரப் பேரம்பெய்த படலம் 15



அடைந்து பணிந்தரு ணாயக னேயடி யேனொடு விக்கிரமன்
தொடர்ந்தம ராட வயற்புல மன்னவர் தொகையொடு பாசறைவாய்ப்
படர்ந்திறை கொண்டன னேபொர வொத்த பதாதி யெனக்கிலையே
மிடைந்து வரும்படை மிக்க விடத்தரண் வேறுள தோ விறைவா.

     (இ - ள்.) அடைந்து - அங்ஙனம் அடைந்து, பணிந்து - வணங்கி,
அருள் நாயகனே - (அடியார் வேண்டியவற்றை) அருளும் பெருமானே,
விக்கிரமன் - விக்கிரம சோழனென்பான், அடியேனொடு தொடர்ந்து அமர்
ஆட - அடியேனுடன் எதிர்த்துப் போர் புரிய, அயல்புல மன்னவர்
தொகையொடுவேற்று நில மன்னரின் தொகுதியோடும், பாசறைவாய்ப்
படர்ந்து இறை கொண்டனன் - பாசறையின் கண் வந்து தங்கினன்; பொர -
அவனோடு பொருதற்கு, ஒத்த பதாதி எனக்கு இலையே - தகுதியுடைய
சேனை என்னிடத்தில் இல்லையே, மிடைந்து வரும் படை மிக்க விடத்து -
நெருங்கி வரும் படை மிகைத்தெழுந்த பொழுது, இறைவா அரண் வேறு
உளதோ - இறைவனே எனக்கு அரணாவது வேறு உண்டோ ? (இல்லை
யென்றபடி).

     அருள் நாயகன் - கருணையுடைய நாயகன் என்றுமாம். அயற்புலம் -
தனது நாட்டிற்குப் பக்கத்திலுள்ள வேறு நாடுகள். இறைகொண்டனன் -
இறுத்தனன், தங்கினன். பதாதி என்பது சேனை என்னும் பொதுப் பொருளில்
வந்துளது. அரண் வேறுளதோ என்றது நின்னையன்றி வேறு காவல் இல்லை
யென்றபடி. (7)

என்னை யினிச்செயு மாறென மாற னிரந்து மொழிந்திடலும்
முன்னவன் வானிடை நின்றச ரீரி மொழிந்தருள் வான்முதனீ
அன்னவ னோடம ராடுபி னாமு மடைந்துத வித்துணையாய்
நின்னது வாகை யெனப்பொரு கின்றன நீயினி யஞ்சலென.

     (இ - ள்.) இனிச் செயுமாறு என்னை என - இனி என்னாற் செய்யக்
கடவது யாது என்று, மாறன் இரந்து மொழிந்திடலும் - பாண்டியன் குறை
யிரந்து கூறலும், முன்னவன் - முதல்வனாகிய சோமசுந்தரக்கடவுள், வான்
இடை நின்று அசரீரி மொழிந்தருள்வான் - விண்ணிலே நின்று அசரீரியாகக்
கூறியருளுவான்; முதல் நீ அன்னவனோடு அமர் ஆடு - முதற்கண் நீ
அவனுடன் எதிர்த்துப் போர் செய்; பின் நாமும் அடைந்து - பின்னர்
நாமும் அங்குவந்து, உதவித்துணையாய் - நினக்கு உதவிபுரியுந் துணையாகி,
வாகை நின்னது எனப் பொருகின்றனம் - வெற்றி உன்னுடைய தென்று
கூறும்படி போர்புரிவோம்; நீ இனி அஞ்சல் என - நீ இனி அஞ்சுத லொழிக
வென்றருள.

     துணையாய் அடைந்து பொருகின்றனம் எனக் கூட்டி யுரைத்தலுமாம்.
பொருகின்றனன் என்பது ஈண்டுப் பொருவாம் என எதிர்காலப் பொருட்டு.
அஞ்சல், ‘மகனெனல்’ என்புழிப்போல எதிர்மறை. (8)