இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 151



விளைவேபோற்றி - இன்பவிளைவே வணக்கம்; போதவடிவாய் - உபதேச
வடிவமாய், நால்வர்க்கு அசைவு இறந்து நிறைந்த பரம்பொருளே போற்றி -
சனகர் முதலிய நால்வருக்கும் அசைவின்றி நிறைந்தருளிய மேலானபொருளே
வணக்கம். மா தவள நீறு அணிந்த மன்னா - பெருமை பொருந்திய வெள்ளிய
திருநீற்றையணிந்தருளிய இறைவனே, அங்கயற்கண்ணி மணாள போற்றி -
அங்கயற்கண்ணம்மையின் காதலனே வணக்கம்.

     வேதம் முதலிய கலைகளெல்லாம் பாசஞானமாகிய அபரஞான
மாகலானும், பதிஞானமாகிய பரஞானத்தினன்றிச் சிவம் விளங்காதாகலானும்
'வேதமுடி கடந்த பரஞானத்திலானந்தவிளைவே' என்றார்;

     தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்படலத்தில்

"வேதமுடிமே லானந்த வுருவாய் நிறைந்து விளையாடும்
மாதரரசே"

என்றமையுங் காண்க. வேத முதலியவை பாசஞான மென்பதை

"வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலாம்
நாதமுடி வானவெலாம் பாச ஞானம்"

என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தால் அறிக. போதவடிவாய்
- போதக வடிவாய்; ஞானவடிவாய் நிறைந்த என்றுமாம். அசைவிறந்தமை
கடவுள் வாழ்த்தில் உரைத்தவாறுங் காண்க. (22)

பொக்கமுடை யார்செய்யும் பூசைதவங் கண்டுநகும் புராண போற்றி
தக்கன்மகம் பொடியாகத் திருப்புருவ நெரித்தகொடுந் தழலே போற்றி
செக்கமலக் கண்ணிடந்த கண்ணனுக்குத் திகிரியருள் செல்வா போற்றி
மைக்குவளை யனையமணி கண்டாவங் கயற்கண்ணி மணாள போற்றி.

     (இ - ள்.) பொக்கம் உடையார் செய்யும் பூசை தவம் கண்டு நகும்
புராண போற்றி - பொய்மையுடையவர் செய்கின்ற பூசையையுந்
தவத்தினையுங் கண்டு சிரிக்கும் பழையோய் வணக்கம்; தக்கன் மகம்
பொடியாக - தக்கன் செய்த வேள்வி நீறாகுமாறு, திருப்புருவம் நெரித்த
கொடுந் தழலே போற்றி - திருப்புருவத்தினை நெரித்தருளிய கொடிய
நெருப்பே வணக்கம்; செக்கமலக்கண் இடந்த கண்ணனுக்கு - செந்தாமரை
மலர்போன்ற கண்ணை இடந்து அருச்சித்த திருமாலுக்கு, திகிரி அருள்
செல்வாபோற்றி - சக்கரப்படை அருளிய செல்வனே வணக்கம்; மைக்குவளை
மலர் அனைய மணிகண்டா - கரிய குவளைமலர் போன்ற நீலகண்டனே,
அங்கயற்கண்ணி மணாள போற்றி - அங்கயற்கண்ணம்மையின் மணவாளனே
வணக்கம்.