16திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



சிந்தை களித்திரு கண்க டுளித்திரு செங்கை குவித்திறைவன்
அந்தி மதிச்சடை யந்தண னைத்தொழு தன்று புறப்படமுன்
வந்தன னொற்றுவ னந்தி வரைக்கயல் வந்தது விக்கிரமன்
வெந்தறு கட்படை யென்றர சற்கு விளம்பின னப்பொழுதே.

     (இ - ள்.) இறைவன் - பாண்டியன், சிந்தைகளித்து -
(அம்மொழியைக் கேட்டலும்) மனமகிழ்ந்து, இருகண்கள் துளித்து - இரண்டு
கண்களிலும் ஆனந்த நீர் பெருக்கி, இருசெங்கை குவித்து - இரண்டு
கரங்களையுங் கூப்பி, அந்திமதிச் சடை அந்தணனைத் தொழுது -
பிறைமதியினை அணிந்த சடையையுடைய அந்தணனாகிய பெருமானை
வணங்கி, அன்று புறப்பட - அப்போது (திருக்கோயிலினின்றும்) வெளிப்பட,
ஒற்றுவன் அரசற்கு முன் வந்தனன் - ஒற்றன் அவனுக்கு முன் வந்து,
விக்கிரமன் வெந்தறுகண்படை - விக்கிரமசோழனது கொடிய
அஞ்சாமையையுடைய படை, நந்தி வரைக்கு அயல் வந்தது என்று
விளம்பினன் - இடப மலைக்கு அருகில் வந்தது என்று கூறினன்;
அப்பொழுதே - அப்போதே.

     அந்திமதி - மாலைப் பொழுதிலே செக்கர் வானத்திற் றோன்றும்
பிறை. வந்தனன், முற்றெச்சம். (9)

அரச னியம்பல வதிர வலம்புரி யலற வலங்குளைமான்
இரத மணைந்திட விசைகொடு சிந்தைபி னிடவல வன்கடவப்
புரவை நெடுங்கரி திரையெறி யுங்கடல் பொருபரி விண்டொடுதேர்
விரைசெய் நறுந்தொடை விருதர்க ணம்புடை விரவ நடந்தனனால்.

     (இ - ள்.) அரசன் - பாண்டியன், பல இயம் அதிர - பல இயங்கள்
ஒலிக்கவும், வலம்புரி அலற - வலம்புரிச் சங்கம் முழங்கவும், அலங்கு
உளை மான் இரதம் அணைந்திட - அசைகின்ற தலையாட்டமணிந்த
குதிரைகள் பூட்டிய தேரில் ஏற, சிந்தை பின்னிட விசைகொடு வலவன்
கடவ - மனவேகமும் பின்னிடுமாறு விசையுடன் பாகன் செலுத்த, புரசை
நெடுங்கரி - கழுத்திடு கயிற்றையுடைய பெரிய யானையும், திரை எறியும்
கடல் பொருபரி - அலை வீசுங் கடலை யொக்கும் குதிரையும்,
விண்தொடுதேர் - வானை அளாவுந் தேரும், விரைசெய் நறுந்தொடை
விருதர் கணம் - மணம் வீசும் நறிய மாலையை யணிந்த வீரர்
கூட்டமுமாகிய நாற் படையும், புடை விரவ நடந்தனன் - அயலிலே சூழ்ந்து
வரச் சென்றனன்.

     அலங்கு உளை - அசைகின்ற தலையாட்டம்;

"அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ"

என்னும் புறப்பாட்டடியின் உரையை நோக்குக; உளை - பிடரிமயிருமாம்.
விருதர் - வீரர். அரசன் இரதம் அணைந்திட வலவன் கடவ அவன்
நடந்தனன் என முடிக்க. (10)