வலைவீசின படலம் 167



     (இ - ள்.) முடங்குமுள் இலையால் புதைந்து - மடங்கிய
முள்ளையுடைய இலைகளால் மறைபட்டு, எதிர்எதிர் மொய்த்து -தம்முன்
எதிரெதிரே நெருங்கி, வளிநூக்க போதொடு நின்று அசைவ - காற்றுத்
தள்ளுவதால் மலரோடு நின்று அசைவனவாகிய, நுடங்குகைதை - வளைந்த
தாழைகள், மடங்குமெய்யராய் - வளைந்த மெய்யினை யுடையராய்; கை
இருங்கேடக வட்டத்து அடங்கி - கையிலுள்ள பெரிய கேடகமாகிய
வட்டத்துள் மறைந்து, வாள்பனித்து - வாளை விதிர்த்து, ஆடு அமர்
ஆற்றுவார் அனைய - வெற்றிதரும் போரினைப் புரிவாரை ஒத்தன.

     முள்ளிலை கேடகத்தையும், போது வாளையும், கைதை போர்
செய்வாரையும் போன்றிருந்தன என்க. (13)

புலவு மீனுணக் கோசையும் புட்களோப் பிசையும்
விலைப கர்ந்திடு மமலையு மீன்கொள்கம் பலையும்
வலையெ றிந்திடு மரவமும் வாங்குமா ரவமும்
அலையெ றிந்திடு பரவைவா யடைப்பன மாதோ.

     (இ - ள்.) புலவுமீன் உணக்கு ஓசையும் - புலானாற்றமுடைய
மீன்களை உலர்த்தும் ஒலியும், புட்கள் ஓப்பு இசையும் - (அவற்றை
உண்ணவரும்) பறவைகளை ஓட்டும் ஒலியும், விலை பகர்ந்திடும் அமலையும்
- (அவற்றை) விலை கூறும் ஒலியும், மீன்கொள் கம்பலையும் - அம்மீன்களை
வாங்குவோர் ஒலியும், வலை எறிந்திடும் அரவமும் - பரதவர் வலை வீசும்
ஒலியும், வாங்கும் ஆரவமும் - அவ்வலையை இழுக்கும் ஒலியும், அலை
எறிந்திடு பரவை வாய் அடைப்பன - அலை வீசும் கடலின் ஒலி வாயை
அடைப்பன.

     ஓசை, இசை, அமலை, கம்பலை, அரவம், ஆரவம் என்பன ஒரு
பொருள் குறித்த வேறு பெயர்த் திரிசொற்கள். ஆரவம் - அரவம் என்பதன்
விகாரமுமாம். கடலின் ஒலி புலப்படாமற் செய்வன என்க. மாது, ஓ
அசைகள். (14)

வாட்டு நுண்ணிடை நுளைச்சியர் வண்டலம் பாவைக்
கூட்டு கின்றசோ றருகிருந் துடைந்தபூங் கைதை
பூட்டு கின்றன நித்திலம் பொருகடற் றரங்கஞ்
சூட்டு கின்றன கடிமலர் சூழல்சூழ் ஞாழல்.

     (இ - ள்.) வாட்டும் நுண் இடை நுளைச்சியர் - (கொங்கைகள்)
வருத்தும் நுண்ணிய இடையினையுடைய நுளைச்சிறுமியரின், வண்டல்
அம்பாவைக்கு - விளையாட்டிடத்துள்ள பாவைக்கு, உடைந்த பூங்கைதை
அருகு இருந்து சோறு ஊட்டுகின்ற - மலர்ந்த மலர்களையுடைய தாழைகள்
பக்கத்திலிருந்து சோற்றினை உண்பியாநின்றன; பொருகடல் தரங்கம் -
மோதுகின்ற கடலின் அலைகள், நித்திலம் பூட்டுகின்றன - முத்து
மாலையைப் பூட்டாநின்றன; சூழல் சூழ் ஞாழல் - சோலையைச் சூழ்ந்த
புலிநகக் கொன்றை மரங்கள், கடிமலர் சூட்டுகின்றன - மணமிக்க
மலர்களைச் சூட்டாநின்றன.