வண்டல்
- மகளிர் விளையாட்டு. சோறு என்றது மகரந்தத்தை.
எழுவாய் மூன்றும் இறுதியிலும், பயனிலை மூன்றும் முதலிலும் நின்றன;
"எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும்" என்னும் நன்னூற் சூத்திரம்
நோக்குக. (15)
நிறைந்த
தெண்கட லாடிநீ ணெறியிடைச் செல்வோர்க்
கறந்தெ ரிந்தபோற் பொதிந்தசோ றவிழ்ப்பன தாழை
சிறந்த முத்தொடு பசும்பொனும் பவளமுந் திரட்டிப்
புறந்தெ ரிந்திடக் கொடுப்பன மலர்ந்தபூம் புன்னை. |
(இ
- ள்.) நிறைந்த தெண்கடல் ஆடி - நீர் நிறைந்த தெள்ளிய
கடலின்கண் நீராடி, நீள் இடைச்செல்வோர்க்கு - நெடுந்தூரம் வழிச்செல்லும்
யாத்திரைக்காரர்களுக்கு, தாழை அறம் தெரிந்தபோல் - தாழைகள் அறநூல்
உணர்ந்தனபோல, பொதிந்த சோறு அவிழ்ப்பன - ஊட்டுதற்குப் பொதிந்த
சோற்றினை அவிழ்ப்பன; மலர்ந்த பூம்புன்னை - மலர்ந்த
பொலிவினையுடைய புன்னை மரங்கள், சிறந்த முத்தொடு பசும் பொனும்
பவளமும் திரட்டி - சிறந்த முத்தையும் பசியபொன்னையும் பவளத்தையும்
ஒன்று சேர்த்து, புறம் தெரிந்திடக் கொடுப்பன - அயலோர் அறியுமாறு
கொடாநின்றன.
அறம்
தெரிந்து அழிபசி தீர்ப்பார் போலத் தாழைகள் சோறு
அவிழ்ப்பன, பிறர் கண்டு புகழுமாறு கொடுப்பார் போலப் புன்னைகள்
கொடுப்பன என்க. பொதிந்த சோறு - பொதி சோறு, மூடிய மகரந்தம்.
முத்து, பொன், பவளம் என்னும் உவமச் சொற்களால் அரும்பு, மலர், பழம்
என்னும் பொருள்களைக் கூறுதல் உருவகவுயர்வு நவிற்சி. (16)
கொன்று
மீன்பகர் பரதவர் குரம்பைக டோறுஞ்
சென்று தாவிமேற் படர்வன திரைபடு பவளம்
மன்றல் வார்குழ னுளைச்சியர் மனையின்மீ னுணக்கும்
முன்றில் சீப்பன கடலிடு முழுமணிக் குப்பை. |
(இ
- ள்.) மீன்கொன்று பகர்பரதவர் - மீன்களைக் கொன்றுவிற்கும்
பரதவர்களின், குரம்பைகள் தோறும் - சிறு குடில் தோறும், திரைபடுபவளம்
சென்று தாவிமேல்படர்வன - கடலில் உண்டாகிய பவளம் போய்த் தாவி
மேலே படரா நின்றன; மன்றல் வார் குழல் நுளைச்சியர் - மணம் நிறைந்த
நீண்ட கூந்தலையுடைய நுளைச்சியர், மனையின் முன்றில் உணக்கும் மீன் -
குடிலின் வாயிலிற் புலர்த்தும் மீன்களை, கடல் இடு முழுமணிக்குப்பை
சீப்பன - கடலின் அலைகளால் இடப்படும் பருத்தமுத்தின் கூட்டங்கள்
சிதைப்பன.
திரை,
ஆகுபெயர். முன்றிலில் அலகிட்டுப் போக்கப்படுவன
மணிக்குப்பை என்றுமாம். (17)
|