சுந்தரப் பேரம்பெய்த படலம் 17



              [எழுசீரடியாசிரிய விருத்தம்]
அளந்து சூழ்திரு வால வாய்மதி லின்பு றத்தக ழாழிபோல்
வளைந்த சோழ னெடும்ப டைக்கெதிர் வஞ்சி வேய்ந்தெழு
                                          பஞ்சவன்
கிளர்ந்த சேனை யதிர்ந்து கிட்டின கிட்டி யவ்விரு படைஞருங்
களஞ்சி றந்திட வஞ்சி னங்கொடு கைவ குத்தமர் செய்வரால்.

     (இ - ள்.) அளந்து சூழ் - வரையறுக்கப்பட்டுச் சூழ்ந்த,
திருவாலவாய் மதிலின் புறத்து - திருவாலவாயின் மதிற்புறத்திலே, அகழ்
ஆழிபோல் - தோண்டிய கடல்போல், வளைந்த சோழன் நெடும்படைக்கு
எதிர் - முற்றிய சோழனது பெரிய படைக்கு எதிரே, வஞ்சி வேய்ந்து எழு
பஞ்சவன் - வஞ்சிமாலை யணிந்து போருக் கெழுந்த பாண்டியனது, கிளர்ந்த
சேனை அதிர்ந்து கிட்டின - ஊக்கத்துடன் எழுந்த படைகள் ஆரவாரித்து
நெருங்கின; கிட்டி அவ்விருபடைஞரும் - அங்ஙனம் நெருங்கி
அவ்விருதிறத்துப் படைவீரரும், களம் சிறந்திட வஞ்சினம்கொடு கை வகுத்து
அமர் செய்வர் - போர்க் களஞ் சிறக்க வஞ்சினங் கூறிப் படை வகுத்துப்
போர்புரிவா ராயினர்.

     அகழ் ஆழிபோல் என்பதற்கு அகழியாகிய ஆழிபோல்
என்றுரைத்தலுமாம். அகழ் - அகழியாதலை ‘வையையும் ஒருபுறத் தகழாம்’
என நகரப் படலத்துட் போந்தமையா லறிக. வஞ்சி - மண்ணசையால்
மேற்சேறல். (11)

சைய மொத்தெழு தேரி னாரொடு சைய மொத்தெழு தேரரும்
மையன் மைக்கரி வீர ரோடெதிர் மையன் மைக்கரி வீரருங்
கொய்யு ளைப்பரி வயவ ரோடிகல் கொய்யு ளைப்பரி வயவருங்
கைய ழற்படை வீசி மின்விடு காரெ னப்பொரு வாரரோ.

     (இ - ள்.) சையம் ஒத்து எழு தேரினாரோடு சையம் ஒத்து எழு
தேரரும் - மலையை யொத்தெழுந்த தேரினையுடைய வீரருடன் தேர்வீரரும்,
மையல் மைக்கரி வீரரோடு எதிர் மையல் மைக்கரி வீரரும் -
மதமயக்கத்தையுடைய கரிய யானை வீரருடன் யானைவீரரும், கொய்
உளைப்பரி வயவரோடு இகல் கொய்உளைப் பரி வயவரும் - கொய்யப்பட்ட
பிடரி மயிரையுடைய குதிரை வீரருடன் மாறுபட்டெழுந்த குதிரை வீரரும்,
கை அழல் படை வீசி - கைகளால் நெருப்புச் சிந்தும் படைக் கலங்களை
வீசி, மின் விடு கார் எனப் பொருவார் - மின்னலை வீசும் மேகம்போல
நின்று போர் புரிவாராயினர்.

     சையம் - மேற்கிலுள்ள ஒரு மலை. அடைகள் தேர் முதலியவற்றிற்
குரியன. அரோ : அசை. (12)

முடங்கு வெஞ்சிலை வில்ல ரோடு முடங்கு வெஞ்சிலை வில்லரும்
விடங்க லுழ்ந்திடு வேல ரோடு விடங்க லுழ்ந்திடு வேலரும்
இடங்கை தோல்வல வாள ரோடு மிடங்கை தோல்வல வாளரும்
மடங்க லேறு மடங்க லேறு மலைப்ப தென்ன மலைப்பரால்.