172திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கார்கொ ணீர்த்திரு மாதுகொல் கரந்துநீ ருறையும்
வார்கொள் பூண்முலை மடந்தைகொல் வனத்துறை வாழ்க்கைத்
தார்கொள் பூங்குழ லணங்குகொ றடங்கணு மிமைப்ப
ஆர்கொ லோமக வாகியீண் டிருந்தன ளென்னா.*

     (இ - ள்.) கார்கொள் நீர்த் திருமாதுகொல் - கரிய கடலின்கண்
தோன்றிய திருமகளோ, கரந்துநீர் உறையும் - நீரின்கண் மறைந்து வசிக்கும்,
வார் கொள் பூண்முலை மடந்தைகொல் - கச்சினை அணிந்த அணிகலன்
தங்கிய கொங்கையையுடைய நீரரமகளோ, வனத்துஉறை வாழ்க்கை -
கானின்கண் உறையும் வாழ்க்கையினையுடைய, தார்கொள் பூங்குழல்
அணங்குகொல் - மாலையை யணிந்த பொலிவான கூந்தலையுடைய
கானரமகளோ, ஆர்கொலோ மகவுஆகி - இவருள் யாரோ ஒரு பெண்
மகவாகி, தடங்கணும் இமைப்ப - பெரிய கண்களும் இமைக்க, ஈண்டு
இருந்தனள் - இங்கு இருந்தனள்; என்னா - என்று கூறி.

     வனத்துறை வாழ்க்கை அணங்கு - வனதேவதை. குழவியின்
பேரழகால் இங்ஙனம் ஐயுற்றானென்க. தடங்கணும் இமைப்ப என்றது
மானுடவுருக் கொண்டிருத்தல் குறிப்பித்தவாறு. கொல், ஐயப்பொருட்டாய
இடைச்சொல். (25)

பிள்ளை யின்மையேற் கிரங்கியெம் பிரான்றமிழ்க் கூடல்
வள்ள னல்கிய மகவிது வேயென வலத்தோள்
துள்ள வன்புகூர்ந் தெடுத்திரு தோளுறப் புல்லித்
தள்ள ருந்தகைக் கற்பினா டனதுகைக் கொடுத்தான்.

     (இ - ள்.) பிள்ளை இன்மையேற்கு - பிள்ளையில்லாத எனக்கு,
எம்பிரான் தமிழ்க்கூடல் வள்ளல் - எமது பெருமானாகிய தமிழையுடைய
நான்மாடக் கூடலிலுறையும் சோமசுந்தரக் கடவுள், இரங்கி நல்கிய மகவு
இதுவே என - அருள்சுரந்து ஈந்தருளியமகவே இது என்று கருதி,
வலத்தோள் துள்ள - வலது தோள் துடிக்க, அன்பு கூர்ந்து எடுத்து
இருதோள் உறப் புல்லி - அன்பு மிகுந்து எடுத்து இரண்டு தோள்களும்
பொருந்தத் தழுவி, தன்அருந்தகைக் கற்பினாள் தனது கைக்கொடுத்தான் -
நீங்குதலில்லாத தகுதியையுடைய கற்பினையுடைய மனைவியின் கையிற்
கொடுத்தான்.

     இன்மையேன் - இன்மையை உடையேன்; இல்லேன். வேண்டுவார்
வேண்டுவதை யீதல் பற்றி 'வள்ளல்' என்றான். மகவே என ஏகாரம்
பிரித்துக் கூட்டுக. ஆடவர்க்கு வலத்தோள் துடித்தல் நன்னிமித்தமாகும். (26)

பிறவி யந்தகன் றெரிந்துகண் பெற்றெனக் கழிந்த
வறிய னீணிதி பெற்றென வாங்கினாள் வலைஞர்
எறியும் வேலையி னார்த்தனர் கையெறிந் திரட்டிக்
குறிய வாணகைவ லைச்சியர் குழறினார் குரவை.


     (பா - ம்.) *இருந்தவளென்னா.