174திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பொருந்த, அலகு இலாதபேர் அழகினுக்கு அழகு செய்து அணிந்தாள் -
அளவிறந்த பெரிய அழகுக்கு ஓர் அழகு செய்து அலங்கரித்தாள்.

     பாசி - பலகறை யென்பாருமுளர். அழகு செய்தணிந்தாள் என்பதற்கு
அழகு செய்யாநின்று அணிந்தாள் என்றேனும், அணிந்து அழகு செய்தாள்
என்றேனும் பொருள்கொள்க.

"அழகினுக் கழகுசெய்தார்"

என்றார் கம்பநாடரும். (29)

தொண்டை வாய்வலைச் சிறுமியர் தொகையொடுந் துறைபோய்
வண்ட லாடியு நித்தில மாமணி கொழித்துங்
கண்டன் ஞாழல்சூழ் கானலங் கடிமலர் கொய்துங்
கொண்ட லோதிபின் றாழ்தரக் குரைகடல் குளித்தும்.

     (இ - ள்.) தொண்டை வாய் வலைச்சிறுமியர் தொகையொடும் -
கொவ்வைக் கனிபோன்ற வாயினையுடைய பரதவச்சிறுமியர் கூட்டத்தோடும்,
துறைபோய் வண்டல் ஆடியும் - கடற்றுறைக்குப் போய்ச் சிற்றில் கோலி
விளையாடியும், நித்திலமா மணிகொழித்தும் - பெரிய முத்துக்களை
(ச்சிறுமுறத்தால்) கொழித்தும், கண்டல் ஞாழல்சூழ் கானல் - தாழைகளும்
புலிநகக் கொன்றைகளுஞ் சூழ்ந்த சோலையில், அம் கடிமலர் கொய்தும் -
அழகிய மணம் பொருந்திய மலர்களைக் கொய்தும், கொண்டல் ஓதி பின்
தாழ்தர - முகில்போன்ற கூந்தல் பின்னேதாழ, குரை கடல் குளித்தும் -
ஒலிக்குங் கடலின்கண் நீராடியும்.

     வண்டல் விளையாட்டிற்கமைய முத்துக்களை அரிசியாகக்கொண்டு
கொழித்தும் என்க. (30)

தளர்ந்த பைங்கொடி மருங்குலுந் தன்னுயிர்த் தலைவன்
அளந்த வைகலுங் குறைபட வவனிடத் தார்வங்
கிளர்ந்த வன்புமொண் கொங்கையுங் கிளரநாட் சிறிதில்
வளர்ந்து வைகினாள் வைகலு முயிரெலாம் வளர்ப்பாள்.

     (இ - ள்.) தளர்ந்த பைங்கொடி மருங்குலும் - ஒல்கியப் பசிய
கொடிபோன்ற இடையும், தன் உயிர்த்தலைவன் அளந்த வைகலும் குறைபட
- தனது உயிர்த் தலைவனாகிய இறைவன் வரையறுத்துக் கூறிய
நாளும்தேயவும், அவனிடத்து ஆர்வம் கிளர்ந்த அன்பும் - அவனிடத்தில்
விருப்பமிக்க அன்பும், ஒண்கொங்கையும் கிளர - ஒள்ளிய கொங்கையும்
வளரவும், வைகலும் உயிர் எலாம் வளர்ப்பாள் - நாள்தோறும்
உயிர்களனைத்தையும் வளர்க்கும் இறைவி, சிறிது நாளில் வளர்ந்து
வைகினாள் - சில நாளில் வளர்ந்து தங்கினாள்.

     மருங்குலும் வைகலும் குறைபட, அன்பும் கொங்கையும் கிளர
என்றமை புணர்நிலை யணியின்பாற்படும். ஈற்றடியின் நயம்
பாராட்டற்குரியது. (31)