176திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) கிட்டும் தோணியைப் படகினைக் கிழிபட - நெருங்கிவரும்
தோணியையும் படகினையும் அவைபிளவுபடுமாறு, விசை போய்த் தட்டும் -
விரைந்து சென்று தாக்கும்; சோங்கினை மேல்இடும் சரக்கொடும்
கவிழமுட்டும் - சோங்கினை அதன் மேலிட்ட சரக்குடன் கவிழுமாறு (கீழே
சென்று) முட்டும்; சீறிமேல் வரும்பல சுறவு எலாம் முடுக்கி வெட்டும் -
சினந்து தன்மேல் வருஞ்சுறா மீன்களனைத்தையுந்துரத்தி வெட்டும்; ஏனைய
மீன் எலாம் கோடுகோத்து வீசும் - மற்றைய மீன்களெல்லாவற்றையும்
கொம்பிற் கோத்துப் புறத்தில் வீசும்.

     தோணி, படகு, சோங்கு என்பன மரக்கல விசேடம். (34)

தரங்க வாரிநீர் கலக்கலாற் றந்திரங் கொடுமேல்
இரங்கு வான்புல வோர்க்கமு தீகையா லெண்ணார்
புரங்கண் மூன்றையும் பொடித்தவ னாணையாற் புனலிற்
கரங்க ணான்கையுங் கரந்தமீன் மந்தரங் கடுக்கும்.

     (இ - ள்.) எண்ணார் புரங்கள் மூன்றையும் பொடித்தவன்
ஆணையால் - பகைவரின் மூன்று புரங்களையும் எரித்த இறைவனது
ஆணையினால், புனலில் - கடலின்கண், கரங்கள் நான்கையும் கரந்தமீன் -
நான்கு திருக்கரங்களையும் மறைத்து உறையும் அச் சுறாமீன், தரங்கவாரி
நீர்கலக்கலால் - அலைகளையுடைய கடல் நீரைக் கலக்குதலாலும், தந்திரம்
மேல்கொடு - நூல்களைச் சிரத்திற்றாங்கி, இரங்குவான் புலவோர்க்கு -
மனம் வருந்தும் சிறந்த புலவர்களுக்கு, அமுது ஈகையால் - ஞானாமிர்தத்தை
அளித்தலாலும் (கடலைக்கலக்கித் தனது வலிமையைக் கொண்டு வருந்திய
சுவர்க்கத்திலுள்ள தேவர்கட்குத் தேவாமிர்தத்தைக்கொடுத்த,) மந்தரம்
கடுக்கும் - மந்தரமலையை நிகர்க்கும்.

     தந்திரம் - நூல், தனது வலிமை. மேல் - சென்னி, மேலிடம். வான் -
மேன்மை, சுவர்க்கம். புலவோர் - அறிஞர், தேவர். அமுது - ஞானம்,
தேவாமிர்தம். மேல்கொடு என மாற்றித் தலைமேற் கொண்டு எனவும்,
மேல்வான் எனக் கூட்டி மேலிடத்ததாகிய சுவர்க்கம் எனவும் உரைக்க.
நந்தியாகிய மீன் என்பார் 'கரங்கள் நான்கையும் கரந்தமீன்' என்றார்.
இச்செய்யுள் செம்மொழிச் சிலேடையணி. (35)

தள்ளு நீர்த்திரை போய்நுளைச் சேரிகள் சாய்ப்பத்*
துள்ளு நீர்குடித் தெழுமறை சூலிறப் பாயும்
முள்ளு நீண்மருப் புடையமீன் மொய்கல மந்தத்
தெள்ளு நீர்த்துறை நடையற வின்னணந் திரியும்.

     (இ - ள்.) முள்ளு நீண்மருப்பு உடைய மீன் - முள் வாய்ந்த
நீண்டகொம்பினையுடைய அச்சுறாமீன், தள்ளும் நீர்த்திரை போய் -
தள்ளுகின்ற நீரின் அலைகள் சென்று, நுளைச்சேரிகள் சாய்ப்பத்துள்ளும் -


     (பா - ம்.) *சேரிகள் சாய