வலைவீசின படலம் 179



பொதுமகளிர் நினைவெனவும் பரம்பொருளெனவும் அகலும் என்றார்.
பரம்பொருள் ஆன்மபோதத்தால் காணப்படுவதன்றென்பதனை,

"தன்னறி வதனாற் காணுந் தன்மைய னல்ல னீசன்"

என்னும் சிவஞான சித்தியால் அறிக.

ஏவ லாளரோ டின்னவா றின்னமீன் படுத்தற்
காவ தாந்தொழி லியற்றவு மகப்படா தாக
யாவ ரேயிது படுப்பவ ரென்றிருங் கானற்
காவ லாளனும் பரதருங் கலங்கஞ ருழந்தார்.

     ((இ - ள்.) ஏவலாளரோடு இன்னவாறு - ஏவலாளருடன் இங்ஙனம்,
இன்ன மீன் படுத்தற்கு ஆவது ஆம் தொழில் இயற்றவும் - இந்த மீனைப்
பிடிப்பதற்கு உரிய தொழிலைச் செய்யவும், அகப்படாதாக - அஃது
அகப்படாதாக; யாவரே இது படுப்பவர் என்று - இனி யாவரே இதனைப்
பிடிக்கவல்லார் என்று கருதி, இருங்கானல் காவலாளனும் - பெரிய
நெய்தனிலத்தலைவனும், பரதரும் கலங்கு அஞர் உழந்தார் - பரதவரும்
பெருந்துன்பத்தால் வருந்தினார்கள்.

     (ஆவதாம்தொழில் - பொருந்திய வினை. கலங்கு அஞர் - நெஞ்சு
கலங்குந்துன்பம். (41)

சங்க லம்புதண் டுறைகெழு நாடனிச் சலதித்
துங்க மந்தர மெனக்கிடந் தலமருஞ் சுறவை
இங்க ணைந்தெவன்* பிடிப்பவ னவனியா னீன்ற
மங்கை மங்கலக் கிழானென மனம்வலித் திருந்தான்.

     ((இ - ள்.) சங்கு அலம்பு தண்துறை கெழுநாடன் - சங்குகள்
ஒலிக்கும் குளிர்ந்த நீர்த்துறைகள் பொருந்திய கடல் நாடன், இச்சலதி - இக்
கடலின்கண், துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரு சுறவை - வலிமிக்க
மந்தரமலைபோலக் கிடந்து கலக்கும் சுறாமீனை, இங்கு அணைந்து எவன்
பிடிப்பவன் - இங்கு வந்து பிடிப்பவன் எவனோ, அவன் யான் ஈன்ற
மங்கை மங்கலக்கிழான் என - அவனே யான் பெற்ற மங்கையின்
மணவிழாவுக்கு உரியவன் என்று, மனம் வலித்திருந்தான் -
உறுதிகொண்டிருந்தான்.

     (கிழான் - உரியவன். வலித்தல் - உறுதியாக எண்ணுதல். (42)

நந்தி நாதனு மினையனா யங்கய னாட்டத்
திந்து வாணுத லாளுமங் கனையளா யிருப்பத்
தந்தி நாலிரண் டேந்திய தபனிய விமானத்
துந்து நீர்ச்சடை யார்மண முன்னினார் மன்னோ.


     (பா - ம்.) * அங்கணைந்தெவன்.