வலைவீசின படலம் 181



இட்ட துகிலினன் - தோளின்கண் இட்ட மேலாடையுடையவனாய், குஞ்சி
சூட்டும் - மயிரின்கண் சூட்டிய, முருகு கொப்பளிக்கும் நெய்தற்கண்ணியன்
- தேன் கொப்பளிக்கும் நெய்தல்மாலையையுடையவனாய், மூத்த வானோர்
இருவரும் மறையும் தேடி இளைப்ப - தேவர்களில் மூத்தவராகிய திருமாலும்
பிரமனுமாகிய இருவரும் மறைகளும் தேடிக் காணாது இளைக்க, ஓர்
வலைஞன் ஆனான் - ஒரு வலைமகன் வடிவங் கொண்டருளினன்.

     கச்சினன் முதலிய குறிப்பு முற்றுக்கள் வினையெச்சமாயின. மூத்த -
பெருமையுடைய என்றுமாம். (45)

முழுதுல கீன்ற சேற்கண் முதல்வியை யருளி லார்போல்
இழிதொழில் வலைமா தாகச் சபித்தவா றென்னே யென்றும்
பழிபடு சாப மேறார் பரதராய் வரவும் வேண்டிற்
றழகிது நன்று நன்றெம் மாலவா யடிகள் செய்கை.

     (இ - ள்.) உலகு முழுது ஈன்ற சேல்கண் முதல்வியை -
உலகமனைத்தையும் பெற்றருளிய அங்கயற்கண்ணம்மையை, அருளிலார்போல்
- அருளில்லாதவர் போல, இழிதொழில் வலைமாது ஆகச் சபித்தவாறு
என்னே - இழிந்த தொழிலையுடைய வலைக்குலக்கன்னி ஆகுமாறு சபித்த
காரணம் யாதோ (அங்ஙனம் சபித்ததால்), என்றும் பழிபடு சாபம் ஏறார் -
எஞ்ஞான்றும் பழிபொருந்திய சாபம் ஏற்காத தாம், பரதராய் வரவும்
வேண்டிற்று - ஒரு வலைஞராக வரவும் வேண்டியதாயிற்று; எம் ஆலவாய்
அடிகள் செய்கை - எமது ஆலவாயின்கண் எழுந்தருளிய ஆண்டவன்
செய்கை, நன்று நன்று அழகிது - நன்று நன்று அழகாயிருந்தது.

     ஏனைத் தேவரெல்லாம் சாபத்தாற் பற்றப்படுவாராதலும், சிவபெருமான்
ஒருவரே சாபத்தாற் பற்றப்படாராதலும் உணர்த்துவார் 'பழிபடு சாபமேறார்'
என்றார்;

"சங்கையின் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும்
எங்கடம் பெருமான் முன்னு மெய்திய தில்லை யன்னோர்
அங்கவன் றன்பா லுய்க்கு மளவையி லிறுதிநாளிற்
பொங்கெரி யதன்மேற் செல்லும் பூளைபோன் மாய்ந்த வன்றே"

என்னும் கந்தபுராணம் - ததீசியுத்தரப்படலச் செய்யுள் காண்க. செய்கை
- விளையாட்டு. அழகிது நன்று நன்று என்பன வியப்பின்கண் வந்தன. இது
கவிக்கூற்று. (46)

தன்பெருங் கணத்து ளானோர் தலைவனுஞ் சலதி வாணன்
என்பது தோன்ற வேட மெடுத்தெறி வலைதோ ளிட்டு
வென்புற மலைப்பக் காவி மீனிடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.