182திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) தன்பெருங் கணத்துளான் ஓர் தலைவனும் - தனது
சிவகணத்துள் தலைவனாயுள்ள ஒருவனும், சலதிவாணன் என்பது தோன்ற
வேடம் எடுத்து - நெய்தனில வாழ்க்கையான் என்பது தோன்ற அவ்
வுருக்கொண்டு, எறிவலைதோள் இட்டு - வீசும் வலையைத் தோளின்கண்
இட்டு, வென்புறம் அலைப்ப - முதுகின் புறத்தை அலைக்க, மீன் இடு
குடம்பை காவி தாங்கி - மீன் இடும் கூட்டினைத் தொடுத்துத் தாங்கி,
பின்புறம் நடந்து செல்ல - பின்புறமாக நடந்துவர, பெருந்துறைப்பாக்கம்
புக்கான் - பெரிய கடற்றுறையிலுள்ள பாக்கத்தை அடைந்தனன்.

     காவுதல் - தண்டின் இருபுறத்தும் தொடுத்தல். (47)

கழித்தலைக் கண்டற் காடுங் கைதையங் கானு நெய்தற்
சுழித்தலை கிடங்கு* நீத்துச் சுஃறெனுந் தோட்டுப் பெண்ணை
வழித்தலை சுமந்து வார்கள் வார்ப்பவா யங்காந் தாம்பல்
குழித்தலை மலர்பூங் கானற் கொடுவலைச் சேரி சேர்ந்தான்.+

     (இ - ள்.) கழித்தலைக்கண்டல் காடும் கைதையம் கானும் -
கழியின்கண் உள்ள முள்ளிக்காட்டினையும் தாழைக்காட்டினையும், நெய்தல்
சுழித்து அலை கிடங்கும் நீத்து - நெய்தன் மலரைச் சுழித்து அலைக்குங்
கிடங்குகளையும் கடந்து, சுஃறெனும் தோட்டுப் பெண்ணை - சுஃறென்று
ஒலிக்கும் மடலையுடைய பனையானது, வழி - வழியின்கண் நின்று, வார்
கள் தலை சுமந்து வார்ப்ப - ஒழுகுங் கள்ளினைத் தலையின்கண் சுமந்து
வார்க்க, குழித்தலை - குழியின்கண், ஆம்பல்வாய் அங்காந்து மலர் -
ஆம்பல்வாய் திறந்து மலரும், பூங்கானல் கொடு வலைச்சேரி சேர்ந்தான் -
அழகிய சோலைகள் சூழ்ந்த நுளைச்சேரியை அடைந்தான்.

     கண்டல் - கடல்முள்ளிச்செடி; கண்டலைச் செந்தாழை என்றும்,
கைதையை வெண்டாழை என்றும் கூறுவாருமுளர். சுஃறெனும், ஒலிக்குறிப்பு.
பெண்ணை கள்வார்ப்ப ஆம்பல்வாயங்காந்து மலரும் என்ற வருணனையால்
அச்சேரியிலுள்ளார் கள்ளுண்டல் குறிக்கப்பட்டது. கொடுவலை - வளைந்த
முடிகளையுடைய வலை; கொடுமையுடைய சேரியுமாம். (48)

பெருந்தகை யமுதன் னாளைப் பெறாதுபெற் றெடுப்பா னோற்ற
அருந்தவ வலைஞர் வேந்த னதிசய மகத்துட் டோன்ற
வருந்தகை யுடைய காளை வலைமகன் வரவு நோக்கித்
திருந்தழ குடைய நம்பி யாரைநீ செப்பு கென்றான்.

     (இ - ள்.) பெருந்தகை அமுது அன்னாளை - பெருந்தகைமை
வாய்ந்த அமுதம் போலும் உமையம்மையை, பெறாது பெற்றெடுப்பான்
நோற்ற அருந்தவ வலைஞர் வேந்தன் - பெறாது பெறுதற்குச் செய்த அரிய
தவத்தினையுடைய வலைஞர் மன்னன், அகத்துள் அதிசயம் தோன்ற வரும்
- மனத்தின்கண் ஒரு வியப்புத்தோன்றுமாறு வருகின்ற, தகை உடைய


     (பா - ம்.) *சுழித்தலைக் கிடங்கு. +சேரி சார்ந்தான்.