வலைவீசின படலம் 183



காளை வலைமகன் வரவு நோக்கி - தகுதியையுடைய காளைப்பருவமுடைய
வலைமகனது வருகையைப் பார்த்து, திருந்து அழகு உடைய நம்பி -
திருந்திய அழகினையுடைய நம்பி, நீ யார் செப்புக என்றான் - நீ யார்
கூறுவாயாக என்று வினவினன்.

     எடுப்பான், வினையெச்சம். அதிசயம் அகத்துட்டோன்ற நோக்கி
என்றுமாம். நம்பி - ஆணிற் சிறந்தவன். யாரை, ஐகாரம் முன்னிலைக்கண்
வந்தது. செப்புகென்றான், அகரம் தொகுத்தல். (49)

சந்தநான் மறைக டேறாத் தனியொரு வடிவாய்த் தோன்றி
வந்தமீன் கொலைஞன் கூறு மதுரையில் வலைஞர்க் கெல்லாந்
தந்தைபோற் சிறந்து ளானோர் தனிவலை யுழவ னல்ல
மைந்தன்யான் படைத்துக் காத்துத் துடைக்கவும் வல்ல னாவேன்.

     (இ - ள்.) சந்த நான் மறைகள் தேறாத் தனி ஒரு வடிவாய்த் தோன்றி
வந்த - சந்தமமைந்த நான்கு மறைகளும் அறியாத ஒப்பற்ற ஒரு
வடிவமாய்த்தோன்றி வந்தருளிய, மீன் கொலைஞன் கூறும் - மீன்கொலை
புரியும் வலைஞன் கூறுவான்; மதுரையில் வலைஞர்க்கு எல்லாம் -
மதுரையின்கண் வலைஞர் அனைவருக்கும், தந்தைபோல் சிறந்துளான் ஓர்
தனிவலை உழவன் - தந்தைபோன்று மேம்பட்டான் ஆகிய ஒரு ஒப்பற்ற
வலையுழவனது, நல்ல மைந்தன் யான் - நல்லபுதல்வன் யான்; படைத்துக்
காத்து துடைக்கவும் வல்லன் ஆவேன் - ஆக்கி அளித்து அழிக்கவும்
வல்லனாவேன்.

     சந்தம் - பண். வலையுழவன் - வலையால் உழுதுண்பான்; வாழ்க்கை
நடாத்துதற்குரிய எல்லாத்தொழில்களையும் உழவாகச் சார்த்திக் கூறுதல்
வழக்கு. தான் இறைவனாதற் கேற்ப முத்தொழிலும் வல்லன் எனவும்,
வலைஞனாக வந்தமைக்கேற்ப மீன்படுத்து வைத்து விற்க வல்லன் எனவும்
கவர் பொருள் படக் கூறினன் என்க; கடல் வாணனாகையால் கடற்குரிய
முத்தொழிற்குணமும் தனக்குளவென்பது தோன்றக் கூறினான்
எனலுமாம். (50)

அல்லது வான்மீ னெல்லா மகப்பட வலைகொண் டோச்ச
வல்லவ னாவே னென்ன மற்றிவன் வலைஞன் கோலம்
புல்லிய மகன்கொன் முன்னம் புகன்றசொல் லொன்றிப் போது
சொல்லிய தொன்றி ரண்டுஞ் சோதனை காண்டு மென்னா.

     (இ - ள்.) அல்லது - அன்றியும், வான்மீன் எல்லாம் அகப்பட -
பெரிய மீன்களனைத்தும் அகப்படுமாறு, வலைகொண்டு ஓச்சவல்லவன்
ஆவேன் என்ன - வலைகொண்டு எறிவதிலும் வல்லவனாவேனென்று கூற,
இவன் வலைஞர் கோலம் புல்லிய மகன்கொல் - இவன் (உண்மை
வலைஞனன்றி) வலைஞர் வடிவெடுத்து வந்த மகனோ, முன்னம் புகன்ற
சொல் ஒன்று - முன் கூறிய சொல் ஒன்று; இப்போது சொல்லியது ஒன்று -
இப்பொழுது சொன்னசொல் ஒன்று; இரண்டும் சோதனை காண்டும் என்னா -
இவ்விரண்டையுஞ் சோதித்துத் காண்போ மென்று கருதி.