184திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     தனது வரம்பிலாற்றுலுடைமை தோன்ற விண்மீன்களெல்லாம்
அகப்பட வலை வீசுவேன் எனவும், வலைஞனாக வந்தமைக் கேற்பப் பெரிய
மீன்களெல்லாம் அகப்பட வலை வீசுவேன் எனவும் கவர்பொருள்படக்
கூறினன் என்க. மகன் என்றது ஆடவன் என்றும் துணையாய் நின்றது.
முன்னம் புகன்ற சொல் வலையுழவன் மைந்தன் என்றது. இப்போது சொல்லிய
சொல் படைத்துக் காத்துத் துடைக்கவும் வல்லேன், வான்மீனெல்லாம்
அகப்படுத்தவும் வல்லேன் என்றது.

தொண்டுறை மனத்துக் கானற் றுறைமக னஃதே லிந்தத்
தண்டுறை யிடத்தோர் வன்மீன் றழலெனக் கரந்து சீற்றங்
கொண்டுறை கின்ற தைய குறித்தது பிடித்தி யேலென்
வண்டுறை கோதை மாதை மணஞ்செய்து தருவே னென்றான்.

     (இ - ள்.) தொண்டு உறை மனத்து - திருத்தொண்டு உறைத்த
மனத்தினையுடைய, கானல் துறைமகன் - அந்நெய்தனிலத்தலைவன்,
அஃதேல் - அங்ஙனமாயின், இந்தத் தண்துறை இடத்து - இந்தக் குளிர்ந்த
துறையின்கண், ஓர் வான்மீன் ஒரு வலிய மீன், தழல் எனக் கரந்து -
வடவைக்கனல் மறைந்திருக்குமாறுபோல மறைந்து, சீற்றம் கொண்டு
உறைகின்றது - சினத்தினை மேற்கொண்டு வசிக்கின்றது; ஐய - ஐயனே,
அது குறித்துப் பிடித்தியேல் - அதனைக் குறிவைத்து(த்தவறாது)
பிடிக்கவல்லையேல், என் வண்டு உறைகோதை மாதை - எனது
புதல்வியாகிய வண்டுகள் உறையுங் கூந்தலையுடைய மாதினை, மணஞ்செய்து
தருவேன் என்றான் - மணஞ்செய்து கொடுப்பேனென்று கூறினன்.

     அஃதேல் - நீ அங்ஙனம் வல்லையாயின். (52)

சிங்கவே றனையான் காலிற் சென்னடைப் படகிற் பாய்ந்து
சங்கெறி தரங்கந் தட்பத் தடங்கடல் கிழித்துப் போகிக்
சிங்கர னான காளை வரையெனக் கிளைத்த தோண்மேற்
றொங்கலிற் கிடந்து ஞான்ற தொகுமணி வலையை வாங்கி.

     (இ - ள்.) சிங்க ஏறு அனையான் - ஆண் சிங்கத்தையொத்த
அவ்வலைஞனாகிய இறைவன், காலில் செல் நடைப்படகில் பாய்ந்து -
காற்றைப்போலச் செல்லும் செலவினையுடைய படகின்கண் பாய்ந்து, சங்கு
எறிதரங்கம் தட்ப - சங்குகளை வீசும் அலைகள் மேலெழுந்து தடுக்கவும்,
தடங்கடல் கிழித்துப்போகி - பெரிய கடலைக் கிழித்துக்கொண்டுசென்று,
கிங்கரனான காளை - பணி செய்வோனாகிய காளைபோன்ற சிவகணத்
தலைவனது, வரைஎனக் கிளைத்த தோள்மேல் - மலைபோலக் கிளைத்த
தோளின்மேல், தொங்கலில் கிடந்து ஞான்ற - மாலைபோலக் கிடந்து
அசையும், மணி தொகு வலையை வாங்கி - (விளிம்பிற்கோத்த) ஈயமணிகள்
நெருங்கிய வலையினை வாங்கி.

     கிங்கரன் - ஏவல் செய்வோன். (53)